Enable Javscript for better performance
கச்சத்தீவு திருவிழா: இலங்கை கடற்படை அதிகாரிகள், நீதிபதிகள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கச்சத்தீவு திருவிழா: இலங்கை கடற்படை அதிகாரிகள், நீதிபதிகள் பங்கேற்பு

    By dn  |   Published on : 17th March 2014 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    katchathevu

    கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் இலங்கை கடற்படை அதிகாரிகள், நீதிபதிகள், இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நடுவில் கடல் பகுதியில் உள்ளது கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

    திருவிழாவையொட்டி, ராமேசுவரத்திலிருந்து 94 படகுகளில் 3,164 மீனவ பக்தர்கள் சனிக்கிழமை கச்சத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் மதியம் கச்சத்தீவை சென்றடைந்தனர்.

    புனித அந்தோணியார் கோயிலில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் தாமஸ்.சௌந்தரநாயகம் தலைமையில் கொடியேற்றம் நடந்தது.

    பின்னர், சிலுவைப்பாதை நிகழ்ச்சியும், சிறப்புத் திருப்பலியும் நடந்தன. தொடர்ந்து நடந்த தேரோட்டத்தில் புனித அந்தோணியார் பவனி வந்தார்.

    ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் இலங்கை கடற்படைத் தளபதி செயன்ட் கொலம்பகே, தரைப்படைத் தளபதி தயாரெத்தினாயகே, யாழ்ப்பாணம் நீதிபதிகள் சிவக்குமார், வளன், ஊர்க்காவல் துறை நீதிபதி லெனின்குமார், யாழ்ப்பாணம் எம்.பி. கில்வேத்திரி, இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரி ரவீந்திரா, இலங்கை கடலோரக் காவல் படையின் யாழ்ப்பாணம் துணைப் பாதுகாப்பு அதிகாரி குணரத்னே, வடக்கு மாகாண அதிகாரி திசநாயகே ஆகியோர் உட்பட அதிகாரிகள், நீதிபதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, அதிகாரிகளை யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் ஜஸ்டின். ஞானப்பிரகாசமும், நெடுந்தீவு பங்குத்தந்தை அமல்ராஜும் வரவேற்றனர். சிறப்புத் திருப்பலிக்கு பிறகு விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து கொடியிறக்கம் நடந்தது. நிறைவாக ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சகாயராஜ் நன்றி கூறினார். பின்னர் அனைவரும் ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பினர்.

     

    வலைகள் ஒப்படைப்பு

    ராமேசுவரத்திலிருந்து மீனவ பக்தர்கள் சென்ற விசைப்படகுகள், இரவு கச்சத்தீவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடல் அலைகள் மற்றும் காற்றின் வேகம் காரணமாக ராமேசுவரத்தைச் சேர்ந்த சகாயராஜ் என்பவருக்குச் சொந்தமான படகு சேதமாகி கடலில் மூழ்கியது.

    இதனால், அந்தப் படகில் சென்ற பக்தர்கள் மாற்றுப் படகு மூலமாக ராமேசுவரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இலங்கை அரசின் சார்பில் இரு நாட்டு பக்தர்களுக்கும் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் போதுமான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    கடந்த சில மாதங்களுக்கு முன் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி வலைகள், இலங்கை கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai