சுடச்சுட

    

    கம்பன் காட்டும் இயற்பியல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: நீதியரசர் வி.ராமசுப்ரமணியன்

    By dn  |   Published on : 17th March 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்பனின் ராம காவியத்தில் உள்ள மெய்யியல், இயற்பியல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன்.

    காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கம்பன் மணிமண்டபத்தில் "துறை தோறும் கம்பன்' எனும் தலைப்பில் உலகத் தமிழ்க் கருத்தரங்க நிறைவு விழா நடைபெற்றது. இதில் நிறைவுரை ஆற்றி நீதியரசர் பேசியதாவது:

    கம்பன் காட்டும் இயற்பியலையும், மெய்யியலையும் தொடர்புபடுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், ஆராய்ச்சிக் கட்டுரைகள் அளிக்க வேண்டிய அளவுக்கு ஏராளமான செய்திகள் அதில் பொதிந்து கிடக்கிறது.

    காதுக்கு வடிகட்டும் திறமை உள்ளது. கண்களுக்கு வடிகட்டும் திறமை இல்லை. காலகாலமாக வேதங்கள் குறைவு படாமல் வந்ததற்குக் காரணம் செவிவழியாகவே அவை கேட்கப்பட்டு வந்ததுதான். எப்போது அச்சிடுதல் தொடங்கியதோ, அதன் பின்னர் தான் இடைச்செருகல்கள் வந்தன. அச்சிலே வராததற்கு முன் ஏன் வேதங்களில் இடைச்செருகல் வரவில்லை என்றால், செவிவழியாகவே அவை வந்ததுதான்.

    கம்பனின் மெய்யியலும் இயற்பியலும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன என்பதை ராம காவியத்தில் உள்ள 6 காண்டங்களின் இறை வணக்கப் பாடல்களிலேயே காணலாம். முதல் காண்டத்தில் உள்ள இறைவணக்கப் பாடலான உலகம் யாவையும் என்ற பாடலில், தாம் உருவாக்கலும் எனச் சொல்லாமல் உளவாக்கலும் என கம்பன் சொல்லியுள்ளார். எந்தப் பொருளும் உருவாக்கப்படவில்லை, ஏற்கெனவே இருக்கின்ற ஒன்றுதான் மற்றொன்றாக உரு மாற்றப்படுகிறதே தவிர, உருவாக்கப்படுவதில்லை என்கிற நியூட்டனின் இயற்பியல் கண்டுபிடிப்பை கம்பன் உணர்ந்ததால்தான் உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் எனக் கோடிட்டு காட்டியுள்ளார்.

    அடுத்த காண்டத்தில் உள்ள இறை வணக்கப் பாடலில் இயற்பியலையும், மெய்யியலையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அதில் அழகியலும் உண்டு. 6 காண்டங்களின் தொகுப்பாக இந்த இறைவணக்கப் பாடல் அமைந்துள்ளது.

    இந்த மனித உடல் 5 பூதங்களினால் ஆனது என்பதை விஞ்ஞானம் மறுக்கவில்லை. ஆனால், விஞ்ஞானம் இதை ஒத்துக் கொள்வதற்கு முன்னரே மெய்ஞானம் இதைக் கண்டுபிடித்து விட்டது. இதை இரண்டாவது காண்டத்தின் இறைவணக்கப் பாடலாக கம்பன் வைத்தார். ஐந்து பூதங்களின் சேர்க்கையில் பொருள்கள் உருவாகலாம். ஆனால், பல்வேறு உயிர்கள் உருவாக வேண்டுமானால் ஊனும், உயிரும், உணர்வும் மூன்றும் பஞ்சபூதங்களுடன் சேர வேண்டும். இப்படி உயிர்கள் உருவான பின்பு தனக்குள்ளே உலகம் யாவையும் தந்து அவற்றுள் இறைவன் தங்குவான் என கம்பன் பேசுகிறான். இதையே மூன்றாவது காண்ட இறைவணக்கப் பாடலாக கம்பன் வைத்துள்ளார்.

    உபநிஷ கருத்துகளை உள்வாங்கிக் கொண்ட கம்பன், இறைவன் உள்ளான் என்பதையும், இல்லை என்ற மெய்யியல் கோட்பாட்டினையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதை ஒன்றே என்றின் ஒன்றேயாம் எனும் பாடல் காட்டுகிறது. இறைக் கோட்பாடு, இறை மறுப்பு கோட்பாடு ஆகியவற்றை இணைத்து தனது காவியத்தின் ஆறு காண்டங்களில் இறைவணக்கப் பாடல் படைத்துள்ளார். இந்த தலைப்பில் யாராவது ஆராய்ச்சி செய்யவில்லை என்றால் அதை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் நீதியரசர் வி.ராமசுப்ரமணியன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai