சுடச்சுட

    

    "கலைஞர் திமுக' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குகிறார் அழகிரி?

    By dn  |   Published on : 17th March 2014 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    poster1

    "கலைஞர் திமுக' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக ஆதரவாளர்களுடன் மதுரை தயா மகாலில் திங்கள்கிழமை (மார்ச் 17) முக்கிய ஆலோசனை நடத்தி, புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

    மதுரை முழுவதும் கலைஞர் திமுக என்ற பெயரில் அழகிரி புதிய கட்சி தொடங்க இருப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திமுக-வின் தென் மாவட்ட அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி, ஸ்டாலினுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளார். கருணாநிதியைத் தவிர, யாரையும் தலைவராக ஏற்க முடியாது, குறிப்பாக, ஸ்டாலினை தலைவராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தார்.

    திமுக தலைமையை விமர்சித்து மு.க. அழகிரி ஆதரவாளர்கள் சிலர் மதுரை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுவரொட்டிகளை ஒட்டினர்.

    இதுதொடர்பாக, அவரது ஆதரவாளர்களான மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 5 பேர் திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து, மு.க.அழகிரியும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதுடன், கட்சியிலிருந்தும் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

    புதிய கட்சி தொடங்குவது குறித்து மார்ச் 17-ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யவிருப்பதாக, சென்னையில் சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தார் அழகிரி. சனிக்கிழமை மதுரை திரும்பிய அவரை காங்கிரஸ் எம்.பி. ஜே.எம். ஹாருண் சந்தித்தார். மேலும், சில காங்கிரஸ் பிரமுகர்கள் அவரை சந்தித்ததாகவும், காங்கிரசுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் மு.க. அழகிரியை வரவேற்று, "கலைஞர் திமுக பொதுச் செயலாளரே வருக, வருக, கட்சி, கொடி ரெடி' என அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

    அழகிரிக்குச் சொந்தமான தயா மகாலில் நடைபெறும் இக் கூட்டத்தில் திருவள்ளூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆதரவாளர்கள் பங்கேற்க இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai