சின்னசேலம் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் சாவு
By dn | Published on : 17th March 2014 03:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
சின்னசேலம் அடுத்த செல்லியம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (33). இவரும், அவரது நண்பர்களான சின்னசேலம் வட்டம் நைனார்பாளையத்தைச் சேர்ந்த முருகன் மகன் சூர்யா (26), கரூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக் (35), சேலம் மாவட்டம் சதாசிவபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் தங்கதுரை (32), காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த நல்லத்தம்பி மகன் அழகுவேல் (32), சிவமாலை மகன் மணிகண்டன் (25) ஆகியோரும் சின்னசேலம் வட்டம் அடிபெருமாள்கோயில் பகுதி அருகே உள்ள கோமதுரை கோயிலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றனர். காரை சேலம் மாவட்டம் வி.கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் பழனி (34) ஓட்டிச் சென்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தனர். பூசப்பாடி கூட்ரோடு அருகே வந்தபோது, கார் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. அதில் செல்வராஜ் (33), சூர்யா (26) கார்த்திக் (35) ஆகிய 3 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் பயணம் செய்த டிரைவர் பழனி, தங்கதுரை, அழகுவேல், மணிகண்டன் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர்.
அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சின்னசேலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.