Enable Javscript for better performance
திமுகவின் தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை: கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா பேச்சு- Dinamani

சுடச்சுட

  

  திமுகவின் தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை: கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா பேச்சு

  By dn  |   Published on : 17th March 2014 03:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya_campaign

  மத்திய அரசில் அங்கம் வகித்துவிட்டு தற்போது பெட்ரோல் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றி அமைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் திமுக கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில், அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.காமராஜை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

  மத்திய காங்கிரஸ் அரசால், நாட்டில் விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் துறையில் கூட ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த அரசில் தொடர்ந்து அங்கம் வகித்து வந்த திமுகவும் 2 ஜி-யில் ரூ.2 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளது.

  கடந்த 33 மாத ஆட்சியில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையையுடன் நடந்து கொண்ட போக்கையும் மீறி, தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். ஏழை, எளிய மக்களுக்காக "அம்மா உணவகம்' திறக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

  புனிதப் பயணத்துக்கு மானியம்: இந்துக்கள் மானசரோவர் செல்வதற்கும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதற்கும் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை 3.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கை மாநில பிற்பட்டோர் நலத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்துள்ளோம்.

  மின் உற்பத்தியில் விரைவில் தன்னிறைவு: தமிழ்நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க புதிய மின்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும்.

  அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் விவசாய விளைபொருள்களை உற்பத்தி செய்வதில் சிறப்பிடம் பெற்று பரிசு பெற்றது. 2 ஆம் ஆண்டு வறட்சியாலும், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததாலும் விவசாய உற்பத்தி சற்று குறைந்தது. சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

  வேறு அணிக்கு அளிக்கும் வாக்கு வீண்: மத்திய காங்கிரஸ் அரசையும், திமுகவையும் இத்தேர்தலில் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். வேறு அணிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்கள் வாக்குகள் பிரிந்து வீணாகிவிடும். அதனால் நீங்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

  திமுக தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை: திமுக தனது தேர்தல் அறிக்கையில், பெட்ரோலிய விலை நிர்ணயக் கொள்கையை மாற்றுவதாகவும், சில்லறை விநியோகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது. பெட்ரோலியப் பொருள்களின் விலையை பெட்ரோலிய நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள உரிமம் வழங்கப்பட்டபோது மத்திய அரசின் கூட்டணியில்தான் திமுக இருந்தது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது. ஆனால் தற்போது யாரை ஏமாற்றுவதற்கு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது?

  இலங்கை அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ்: கச்சத்தீவை மீட்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கும், தமிழ் ஈழம் அமைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் காங்கிரஸ் அரசு அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக் கூட்டணியில் இருந்த திமுகவும் வலியுறுத்தவில்லை. இலங்கை ராணுவ வீரர்களுக்கு போர்ப் பயிற்சிகளை அளித்து, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு மத்திய அரசு காரணமாக இருந்தது.

  அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி தேவை: இப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உங்கள் நலன் பாதுகாக்கப்படுவதற்கு அதிமுக அரசுக்கு வாக்களிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை எந்த அளவுக்கு வெற்றி பெற வைத்தீர்களோ அந்த அளவுக்கு இத்தேர்தலிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

  மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு பொறுப்பேற்றால்தான், தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படும். ஐ.நா. அவையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி நதிநீர் வாரியத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

  இக் கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக தொழில்துறை அமைச்சர் மோகன், எம்எல்ஏ அழகுவேல்பாபு, முன்னாள் எம்எல்ஏ சிவராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இப் பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai