சுடச்சுட

    

    பாஜக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு திருப்பூர் மக்களவைத் தொகுதி கிடைக்காவிடில், கொங்கு மண்டலத்திலுள்ள 14 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டுமென அக்கட்சித் தலைமையை நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    பாஜக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு கரூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நாமக்கல் தெற்கு, வடக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலர் விஜயன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பாஜக கூட்டணியில் முதலில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 5 தொகுதிகள் கோரப்பட்டு, பின்னர் 3 தொகுதிகளாகக் குறைத்துக் கொள்ளப்பட்டு, இறுதியில் ஒரு தொகுதி, அதுவும் திருப்பூர் மக்களவைத் தொகுதி வழங்க வலியுறுத்தப்பட்டது.

    இதை முதலில் ஏற்றுக் கொண்ட பாஜக, தற்போது திடீரென திருப்பூர் தொகுதியை தனக்கு வைத்துக் கொண்டு, கரூர் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு வழங்குவதாகக் கூறி வருகிறது. பாஜகவின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கைகள் வருத்தம் அளிக்கிறது.

    கடந்த உள்ளாட்சித் தேர்தல் முதலே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பாஜகவுடன் தோழமை உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரத்துக்காக சென்னைக்கு வருவதற்கு முன்பே அவரைப் பிரதமாக்கிட நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலர் ஈஸ்வரன் அறிவித்தார்.

    திருப்பூர் மக்களவைத் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்காவிடில், கொங்கு மண்டலத்திலுள்ள 14 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைமையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல, 14 மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.

    கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் பரிபூரணம், மாவட்ட விவசாய அணி செயலர் பழனிமலை, மாவட்டத் துணைச் செயலர் ரவிச்சந்திரன், நாமக்கல் நகரச் செயலர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai