சுடச்சுட

  

  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே செங்கல் காளவாயில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 56 பேர் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

  பாபநாசம் அருகே சுந்தரபெருமாள் கோயில் மணவாளம்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி ராஜேஸ்வரி (56). இவர் அரசலாற்றுப்படுகை உமையாள்புரம் தட்டுமால் படுகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் காளவாய் நடத்தி வருகிறார். இதை அவரது மகன்கள் சாமிநாதன் (30), ராஜா (28) இருவரும் நிர்வகித்து வருகின்றனர்.

  இங்கு சிலர் கொத்தடிமைகளாக வேலைபார்ப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் உத்தரவின் பேரில், கும்பகோணம் உதவி ஆட்சியர் கோவிந்தராவ், பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவாஜிஅருட்செல்வம், வட்டாட்சியர் ஏ. அருண்மொழி உள்ளிட்டோர் ஞாயிற்றுகிழமை காலை செங்கல் காளவாயில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

  இதில், அங்கு ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த இருபது குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் மீட்கப்பட்டு வாகனங்கள் மூலம் பாபநாசம் ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  இதுகுறித்து உதவி ஆட்சியர் கோவிந்தராவ் கூறியது:

  செங்கல் காளவாயில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த 23 பெண்கள், 23 ஆண்கள், 10 வயதிற்குட்பட்ட 6 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் உள்ளிட்ட 20 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

  அவர்களது வேலைக்கான ஒப்பந்தங்கள் ரத்துசெய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு, அரசு செலவில் அவர்களின் இருப்பிடங்களில் கொண்டு சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் செங்கல் காளவாய் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai