Enable Javscript for better performance
புதுவையில் நாராயணசாமி போட்டியிட எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியில் இருந்து 50 பேர் ராஜிநாமா- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் நாராயணசாமி போட்டியிட எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியில் இருந்து 50 பேர் ராஜிநாமா

    By dn  |   Published on : 17th March 2014 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து, மாநிலச் செயலாளர் வெற்றிச்செல்வம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

    இதுகுறித்து மாநிலச் செயலாளர் வெற்றிச்செல்வம், புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனுக்கு சனிக்கிழமை அனுப்பிய ராஜிநாமா கடித விவரம்:

    புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளது.

    கட்சியில் நேர்மையற்ற முறையில், ஒரு குறிப்பிட்ட சிலருடைய விருப்பு வெறுப்புக்காக மட்டுமே பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

    சுய லாபம் கொண்ட ஒரு சிறு கும்பலால் காங்கிரஸ் கட்சி சீர்கேடான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

    30 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து ஒரு நபருக்கே பதவியும், வாய்ப்பும் காங்கிரஸ் கட்சி கொடுக்கிறது. அப்படிப்பட்ட நபரால் இந்த மாநில மக்களுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ அல்லது காங்கிரஸ் தொண்டர்களுக்கோ இதுநாள் வரை எந்த பயனும் ஏற்படவில்லை.

    கட்சியில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு இல்லை. தியாகிகளுக்கும் மரியாதை இல்லை. எனவே, எங்களைப் போன்றவர்கள் இந்தக் கூடாரத்தில் நீடிப்பது கொஞ்சமும் தகாத செயல் என்று இறுதி முடிவு எடுத்த பிறகு நாங்கள் வகிக்கின்ற அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளையும் ராஜிநாமா செய்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் வெற்றிச்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

    வெற்றிச்செல்வத்துடன் மாநிலச் செயலாளர் கலைவாணி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சண்முகம், வடக்கு மாவட்டத் தலைவர் சாரதி, பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுந்தரம், முரளி, செüந்தர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தியாகி தண்டபாணி, மண்ணடிப்பட்டு ஜீவானந்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    ராஜிநாமா செய்துள்ள வெற்றிச்செல்வன் தரப்பினர் இன்னும் ஓரிரு நாளில் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தங்கள் முடிவுகளை அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai