Enable Javscript for better performance
புதுவையில் பாமக போட்டியிடுவது உறுதி - Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாமக உறுதியாக போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளரும், வேட்பாளருமான ஆர்.கே.ஆர்.அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பாமக சார்பில் புதுவை தொகுதியில் அனந்தராமன் போட்டியிடுவார் என கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவரும் தேர்தல் பிரசாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அன்புமணி ராமதாஸ் புதுவைக்கு வந்து முதல்வர் ரங்கசாமியிடம் 4 முறை சந்தித்து பாமகவுக்கு ஆதரவு கோரினார். ஆனால் முதல்வர் அதற்கு பிடிகொடுக்கவில்லை. மேலும், பேரவை முன்னாள் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் புதுவை எம்பி தொகுதியில் போட்டியிடுவார் எனவும், பாஜக கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இது பாமகவினருக்கு கடும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் பாமக மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் அனைவரும், புதுச்சேரியில் பாமகவை மதிக்காமல் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து வேட்பாளரை அறிவித்துள்ளது. எனவே பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இறுதியில் மாநில செயலர் அனந்தராமன் பேசியது:

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பு இந்திரா நகர் இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் பாமக இருந்தது. அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளரை அறிவிக்கும் முன்பு முதல்வர் ரங்கசாமியை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அவரது ஒப்புதலுடன்தான் புதுச்சேரிக்கு பாமக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

    முதல்வர் ரங்கசாமியை, அன்புமணி 4 முறை நேரிலும், ராமதாஸ் பலமுறை தொலைபேசியிலும் பேசி ஆதரவு கேட்டனர். அன்புமணி அவரை சந்திக்க வந்தபோது பலமணி நேரம் காக்க வைத்தே முதல்வர் சந்தித்தார். அப்போது கனிவுடன் பரிசீலிப்பதாக கூறிவிட்டு, தற்போது ரங்கசாமி வேட்பாளரை அறிவித்து விட்டார்.

    தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக இருந்தாலும், புதுச்சேரியில் தனித்து போட்டியிடுகிறது. புதுச்சேரியிலும் நாங்கள் மோடி பிரதமராகதான் வாக்கு சேகரிப்போம் என்றார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், புதுவையில் தனித்து போட்டியிட ராமதாஸ் ஒப்புதல் தந்துள்ளார். வாபஸ் பெறமாட்டோம் என்றார்.

    நகைகளை அளித்த மகளிரணி நிர்வாகிகள்: முன்னதாக தேர்தல் செலவுக்காக மகளிரணிச் செயலர் சுகுமாரி தான் அணிந்திருந்த 10 சவரன் நகைகளையும், மகளிரணித் தலைவி ஜெயந்தி தனது 4 சவரன் நகைகளையும் மேடையிலேயே கழற்றித் தந்தனர். வேட்பாளர் அனந்தராமன் கண்கலங்கியபடி நகைகளை வாங்க மறுத்தார். பின்னர் பெற்றுக்கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai