Enable Javscript for better performance
மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமராவது கடினம்: வெங்கய்ய நாயுடு- Dinamani

சுடச்சுட

  

  மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமராவது கடினம்: வெங்கய்ய நாயுடு

  By dn  |   Published on : 17th March 2014 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  venkiahnaidu

  மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமராவது கடினம் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

  சென்னையில் பாஜக நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

  மாநிலக் கட்சிகள் தங்களது பக்கத்து மாநிலங்களில் கூட தேர்தலின்போது போட்டியிடுவதில்லை. இதில் பல மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நாட்டின் பிரதமராக நினைக்கின்றனர். இது சாத்தியமில்லாத விஷயம் மற்றும் கடினமானது கூட.

  ஒரு மாநிலத்தில் 20 முதல் 30 தொகுதிகளை வென்றுவிட்டு, தேசியக் கட்சி 250-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப் பெற்றால் தேசியக் கட்சி வேட்பாளரைத்தான் பிரதமராக முன் நிறுத்த முடியும். அதுதான் முறை, மாறாக மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்களை பிரதமராக முன்னிறுத்த முடியாது.

  மூன்றாவது அணியால் எப்போதும் நல்லாட்சியை தர முடியாது. மூன்றாவது அணியால் நாட்டு நலன் குறித்து தனித்து முடிவெடுக்க முடியாது. அந்த அணியில் நிறையத் தலைவர்களும், பிரதமராக ஆசையுள்ள சிலரும் இருக்கின்றனர். மொத்தத்தில் மூன்றாவது அணி கானல் நீர் போன்றது. தேர்தல் நேரம் நெருங்க, நெருங்க அது காணாமல் போய்விடும். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் மட்டும் சீர்குலையவில்லை. உலக நாடுகளின் மத்தியில் நமது நாட்டின் மீதான மரியாதையும் குறைந்துவிட்டது. நம் அருகே உள்ள சின்னச்சின்ன நாடுகள் கூட நம்மை கண்டால் பயப்படுவதில்லை. அப்படிப்பட்ட நிலையை இந்த காங்கிரஸ் கட்சி உருவாக்கிவிட்டது. நரேந்திர மோடி பிரதமரானால் ஒரே நாளில் பொருளாதாரத்தை சரி செய்துவிட முடியாது. ஆனால் மோடிக்கு அதனை மாற்றும் நம்பிக்கையும் திறமையும் உள்ளது. நரேந்திர மோடியை இஸ்லாமியர்களுக்கு எதிராக சித்திரிக்க முயல்கின்றனர். ஆனால், நாட்டிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு குஜராத்தில்தான் இஸ்லாமியர்களுக்கு தனி நபர் வருமானம் அதிகம். பாஜக ஆளும் மாநிலங்கள், வளர்ச்சியிலும், மின்சார விஷயத்திலும் மிகையான மாநிலங்களாக உள்ளன.

  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைகள் முக்கியம். வாஜ்பாய் கொண்டு வந்த தங்க நாற்கர சாலைத் திட்டத்தை 6 வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்பது திட்டம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு இதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

  அனைத்திலும் பின்தங்கிய இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டிய தருணம் இது. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தவில்லை. பாஜக மக்களிடையே மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் பெருவாரியான மக்கள் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என விரும்பினர். மக்கள் சொன்னதை பாஜக முன் மொழிந்தது என்பதே உண்மை.

  தமிழகத்தைப் பொருத்தவரை தேசியக் கட்சியின் தலைமையில் வலுவான கூட்டணி உருவாகியுள்ளது.

  இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார் வெங்கய்ய நாயுடு. நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai