சுடச்சுட

    
    canvas1

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுக மட்டுமே என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து மேலகரம் பேருந்து நிறுத்தம், தென்காசி வேன் நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தலுக்கு மட்டும் உங்களைத் தேடி வந்து வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை வழங்குபவர்கள் அல்லர் நாங்கள். எந்த நேரத்திலும், சூழ்நிலையிலும் உங்களுடன் இரண்டற கலந்திருப்பது நாங்கள்தான்.

    எத்தனையோ கட்சிகள் இருக்கலாம், தலைவர்கள் இருக்கலாம். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுக மட்டும்தான்.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைப் பற்றி சிந்திப்பார், சந்திப்பார். அப்போது வாக்குறுதிகளையும், உறுதிமொழிகளையும் வாரி வழங்குவார்; அதனை நிறைவேற்றுவாரா என்றால் இல்லை.

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது எத்தனையோ வாக்குறுதிகளைத் தந்தார். திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டை, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து விடுவோம் என்றார்.

    திமுக ஆட்சியில் 2 மணிநேரம் மின்வெட்டு இருந்தது உண்மைதான். ஆனால், தற்போது தினமும் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது.

    கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஒருமுறைகூட பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது கிடையாது. ஆனால், அதிமுக ஆட்சியில் மூன்று முறை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது.

    தென்காசி தொகுதியில் திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இப்போதைய அதிமுக ஆட்சியில் ஏதாவது திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

    திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, கொள்ளை, வெடிபொருள்கள் வைத்திருந்த வழக்கு என மொத்தம் 1,139 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துவிட்டது என்றார் ஸ்டாலின்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai