சுடச்சுட

  

  நெய்வேலி இரண்டாம் சுரங்க வாயிலில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில், சுரங்க ஒப்பந்தத் தொழிலாளி திங்கள்கிழமை மதியம் உயிரிழந்தார்.

  இதனைத் தட்டிக்கேட்க அந்த இடத்தில் குவிந்த நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களை கலைக்க மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களும், தமிழக போலீஸாரும் தடியடி நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளும் வீசப்பட்டதால் அப்பகுதியே போர்க்களமானது. இச்சம்பவத்தில் காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  நெய்வேலி ஒன்றாம் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளி, ராஜா என்ற ராஜ்குமார் (35). இவர், திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில், இரண்டாம் சுரங்கத்தில் பணியாற்றும் தன் நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். அவரை சுரங்க நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர் உள்ளேவிட மறுத்தார்.

  இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதுகாப்புப் படை வீரர் தனது துப்பாக்கியை எடுத்து ராஜ்குமாரின் தலையில் மிக அருகில் மூன்று முறை சுட்டதாகத் தெரிகிறது. இதில் ராஜ்குமாரின் மூளைச் சிதறி, அந்த இடத்தில் கீழே விழுந்து இறந்தார்.

  ஊழியர்கள் போராட்டம்: இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட, நெய்வேலி சுரங்கம் அருகே உள்ள அஜீஸ் நகரைச் சேர்ந்த ராஜ்குமாரின் உறவினர்கள், பொதுமக்கள், என்எல்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏராளமானோர் சுரங்க நுழைவாயிலின் முன் திரண்டனர். அவர்களை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் சரமாரியாக தாக்கி கடலூர்-விருத்தாசலம் சாலை வரை விரட்டினர். அப்போது தொழிலாளர்களும் பதிலுக்கு தாக்குதலில் இறங்கினர். இருதரப்பில் இருந்தும் கற்கள் வீசப்பட்டன. இதில் பலர் காயம் அடைந்தனர்.

  தடியடி: இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தமிழக போலீஸார் விரைந்து வந்தனர். ராஜ்குமாரின் உடலைச் சுற்றி நின்ற உறவினர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் மீது சரமாரியாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்களும் தொழிலாளர்களும் எதிர் தாக்குதல் நடத்தியதால் போலீஸார் திணறி பின்வாங்கினர். இதனையடுத்து, கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.

  ஆனால், உறவினர்களும் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை உடலை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

  திடீரென கூட்டத்திற்குள் வந்த ஆம்புலன்ஸ வாகனம் மீது மக்கள் கற்களாலும் கையாலும் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைந்தன.

  போலீஸார் தாக்குதல்: அப்போது அங்கு வந்த போலீஸ் அதிரடிப்படை வீரர்கள், நுழைவாயில் முன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களையும், உறவினர்களையும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களையும் சரமாரியாக தாக்கினர்.

  பொதுமக்கள் சிதறி ஓடிய இடைவெளியில் ஆம்புலன்ஸ் வாகனம் ராஜ்குமார் உடல் அருகே வந்து சேர்ந்தது.

   ஆனால், உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குறுக்கே மறித்தனர். அவர்களை அப்புறப்படுத்திய போலீஸார் ராஜ்குமார் உடலை ஆம்புலன்சில் ஏற்றி சுரங்கத்தின் பின்பக்க வழியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு: இதனால், உறவினர்களும் பொதுமக்களும் திரண்டுவர, அவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போலீஸார் கலைத்தனர். அப்போது போலீஸார், சம்பந்தமே இல்லாமல் சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்த இருசக்கர வாகனங்களை காலால் உதைத்து தள்ளியும் தடியால் அடித்தும் உடைத்தபடி இருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்களுக்கும் அதிரடிப்படை வீரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

  கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தல்: சுட்டுக்கொன்ற மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரரை, கொலை வழக்கில் உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்தவர் மனைவிக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உறவினர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் எழுப்பினர்.

  உயிரிழந்த ராஜ்குமாருக்கு அமலா லூசி ராணி என்ற மனைவியும் வின்ஸ் பிராங்கிளின்(2) மற்றும் ஒலிவியா (8 மாதம்) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.

  போக்குவரத்து பாதிப்பு: இந்தப் பிரச்னையால் இரண்டாவது சுரங்கத்தில் தொழிலாளர்கள் முதல் ஷிப்ட் பணி முடிந்து வெளியில் வரவும், இரண்டாவது ஷிப்டுக்கு உள்ளே செல்லவும் முடியவில்லை.

  மேலும் கடலூர்-விருத்தாசலம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீஸாரும், ஊழியர்களும் கல்வீசி தாக்கிக்கொண்டதால், இரண்டாவது சுரங்கவாயிலில் இருந்து கடலூர் சாலை வரை கற்களும், செருப்புகளும் சிதறிக் கிடந்தன.

  பாதுகாப்புப்படை வீரர் கைது: இதனிடையே உயிரிழந்த ராஜ்குமார் மனைவி அமலா லூசிராணி கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார், துப்பாக்கியால் சுட்ட தொழில் பாதுகாப்புப் படை வீரர் நோமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai