சுடச்சுட

    

    தேர்தலில் போட்டியிட நாமக்கல் தேமுதிக வேட்பாளர் திடீர் மறுப்பு

    By dn  |   Published on : 18th March 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk17dmdk

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட நாமக்கல் தொகுதி தேமுதிக வேட்பாளர் என்.மகேஷ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார். உடல் நிலை சரியில்லை என்பதைக் காரணம் காட்டி, அவர் கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தை ஏற்று, புதிய வேட்பாளரை அறிவிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.

    பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், நாமக்கல், திருச்சி, மதுரை, திருவள்ளூர், வடசென்னை ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

    இதன்படி, நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு கட்சியின் முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நல்லதம்பியின் மகனுமான என்.மகேஷ்வரன் (34) அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மகேஷ்வரன் பங்கேற்றார்.

    இந்த நிலையில், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். உடல் நிலை சரியில்லாதக் காரணத்தால் தேர்தலில் போட்டியிட இயலாது என்றும், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேறு வேட்பாளரை அறிவிக்கும்படியும் கூறி, கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    தேமுதிக வேட்பாளர் திடீரென தேர்தலில் போட்டியிட மறுப்புத் தெரிவித்திருப்பது அந்தக் கட்சியினரிடையே மட்டுமன்றி, நாமக்கல் மக்களவைத் தொகுதி முழுவதும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மகேஷ்வரனின் தந்தை நல்லதம்பி கூறியது: மகேஷ்வரனுக்கு ஓராண்டுக்கு முன் முதுகுத் தண்டுவடம் வைராஸால் பாதிக்கப்பட்டு, மூளையையும் பாதித்தது. தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக எந்த பிரச்னையும் இல்லாததால், தேமுதிக சார்பில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு செய்தார். அவரது மனுவைப் பரிசீலித்த கட்சித் தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது.

    இந்த நிலையில், சனிக்கிழமை மாலை மகேஷ்வரனுக்கு லேசான தலைவலி ஏற்பட்டது. தொடர்ந்து, கோவை மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு, அவரை உடனடியாக உள்நோயாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும், சுமார் ஒரு மாதம் அவர் ஓய்வில் இருக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனால், வேறுவழியின்றி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கோவையில் சிகிச்சை பெற்று வரும் மகேஷ்வரன், ஓரிரு நாள்களுக்கு பிறகு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார் என்றார் அவர்.

    இதுகுறித்து தேமுதிக மாவட்டச் செயலர் பி.சம்பத்குமார் கூறியது: ஓராண்டுக்கு முன்பு மகேஷ்வரனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, கோவை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அதே பிரச்னையை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நாமக்கல் தொகுதிக்கு வேறு வேட்பாளரை அறிவிக்க கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார். விரைவில் புதிய வேட்பாளரை அறிவிப்பார் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai