பாஜக கூட்டணியிலிருந்து விலகுகிறது பாமக?
By dn | Published on : 18th March 2014 03:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பாஜக - பாமக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கூட்டணி வைக்காமல் பிரிவோம் என்று முதலில் யார் சொல்வது என்பதிலேயே பாஜக - பாமக இடையே போட்டி நிலவுகிறது.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனை பாமக ஏற்றுக் கொள்ளவில்லை.
பாமக சார்பில் ஏற்கெனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
இதோடு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தருமபுரியில் அன்புமணியும், கள்ளக்குறிச்சியில் ஆத்தூர் சண்முகமும் போட்டியிடுவார்கள் என்று ராமதாஸ் அறிவித்தார்.
பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதற்காகவே இந்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாஜக கூட்டணியில் சேலம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியை பாமக விடாப்பிடியாகக் கேட்டு வருகிறது.
இதை ஒதுக்கவும் பாஜக மறுத்துவிட்டது.
இதனால் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10 தொகுதிகளிலும் பாமகவின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
எனவே தனித்துப் போட்டியிடும் முடிவில் ராமதாஸ் உள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறினால் பரவாயில்லை என்ற எண்ணத்துக்கு பாஜகவும் பாமக வந்துவிட்டதாகத் தெரிகிறது.
முதலில் பிரிவை யார் சொல்வது என்பதே பாஜக - பாமக இடையே நடக்கும் போட்டியாக உள்ளது.