சுடச்சுட

  

  மின்வெட்டு பிரச்னை தீரும் என்பது பொய்யான தகவல்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

  By dn  |   Published on : 18th March 2014 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nk17vij2

  மின் வெட்டு பிரச்னை விரைவில் தீர்ந்துவிடும் என்று பொய்யான தகவல்களைத் தெரிவித்து, அதிமுக மக்களை ஏமாற்றி வருகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார்.

  நாமக்கல் அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது: மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த நாமக்கல் திமுக எம்.பி. காந்திசெல்வன், மக்களின் சுகாதாரத்தைக் கவனிக்காமல் அவரது சொந்த நலன்களை மட்டுமே பார்த்துக் கொண்டார்.

  தேசிய அளவில் புகழ்பெற்ற நாமக்கல் முட்டைத் தொழிலுக்கு குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே நிறைவேற்ற வில்லை. உதிரிப் பாகங்கள் விலையேற்றம், சுற்றுச்சாலை அமைக்காதது உள்பட பல்வேறு பிரச்னைகளால் நசிந்துள்ள லாரி கூண்டு கட்டும் தொழில் மேம்பாட்டுக்குத் தீர்வு காணப்படவில்லை.

  அதிமுக அமைச்சர் தங்கமணி, கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடு வருகிறது என்றார். மாறாக, தமிழகத்திலிருந்தே முதலீடுகள் கர்நாடகத்துக்குச் சென்றுள்ளன. தவிர, அதிமுகவால் நாமக்கல்லிலோ, தமிழகத்தின் பிற பகுதியிலோ எந்த ஒரு தொழில்பேட்டையும் திறக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் நிலவிய மின் வெட்டு அதிமுக ஆட்சியிலும் தொடர்கிறது.

  மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்,  இணைப்புப் பாதையை விரைவில் அமைத்திட அண்மையில் 21 எம்எல்ஏக்களுடன் சென்று பிரதமரை வலியுறுத்தினேன். அப்போது, இணைப்புப் பாதை பணி முடிய இரு ஆண்டுகளாகும் என பிரதமர் கூறினார். அதற்குள் மின் வெட்டு பிரச்னை விரைவில் தீர்ந்துவிடும் என்று பொய்யான தகவல்களைத் தெரிவித்து, அதிமுக மக்களை ஏமாற்றி வருகிறது.

  அந்தவகையில், திமுக, அதிமுகவால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அத்தகைய நன்மையை, சுகமான வாழ்வைத் தந்திருந்தால், நான் தேமுதிகவைத் தொடங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

  தற்போதைய அதிமுக ஆட்சியில் லஞ்சமும், ஊழலும் அதிகரித்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல் துறையை தங்கள் கட்சிக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

  எனவே, தமிழகம் மட்டுமன்றி, நாட்டு மக்கள் நிம்மதியான வாழ்வைப் பெற்றிட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இது சாதாரண தேர்தல் அல்ல. இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல். கூட்டணியில் போட்டியிடும் கட்சி, வேட்பாளர்கள் குறித்து தேசியக் கட்சியான பாஜக விரைவில் அறிவிக்கும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai