Enable Javscript for better performance
வேட்பாளர்களை மாற்றாவிட்டால் திமுக 4ஆவது இடத்துக்கு தள்ளப்படும்: மு.க.அழகிரி பேச்சு- Dinamani

சுடச்சுட

  

  வேட்பாளர்களை மாற்றாவிட்டால் திமுக 4ஆவது இடத்துக்கு தள்ளப்படும்: மு.க.அழகிரி பேச்சு

  By dn  |   Published on : 18th March 2014 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mduala1

  வேட்பாளர்களை மாற்றி அறிவிக்காவிட்டால் மக்களவைத் தேர்தலில் திமுக நான்காவது இடத்துக்குத் தள்ளப்படும் என்று மு.க.அழகிரி கூறினார்.

  மதுரையில் திங்கள்கிழமை நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில், ஆதரவாளர்கள் பலரது கருத்துகளையும் கேட்ட பிறகு நிறைவாக மு.க.அழகிரி பேசியது:

   மதுரையில் திங்கள்கிழமை நடந்த கூட்டத்தில் பலரது கருத்துகளையும் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல் கூட்டம். இதுபோல, தென் மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும் ஆதரவாளர்களின் கூட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. அதன் பிறகுதான் எந்தவொரு முடிவையும் அறிவிக்க முடியும்.

    இங்கே பேசியவர்கள், திமுக தலைவர் கருணாநிதி என்னை அழைத்து ஒற்றுமையாகப் பணியாற்றி, திமுக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், இப்போதைய பட்டியலில் இருக்கும் வேட்பாளர்கள், அதற்கு தகுதியானவர்கள் அல்ல. அவர்கள் கருணாநிதியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை உறுதியாகக் கூற முடியும். ஏனெனில், அவரது தேர்வு இப்படி இருக்காது. கட்சியில் இல்லாதவர்களுக்கெல்லாம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

   விருதுநகர் தொகுதிக்கு திமுக வேட்பாளராக ரத்தினவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய குறிப்பு என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்த்தும் மகிழ்ச்சியும் என்ற தலைப்பில், அதிமுக மேயர் வி.வி.ராஜன் செல்லப்பாவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஊழல் இல்லாத மாநகராட்சி நிர்வாகத்தை வழங்க மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், மதுரை மாநகரம் சுத்தமான, சுகாதாரமான காற்று வீசத் துவங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

   திமுக ஆட்சியில் சுத்தம், சுகாதாரம் இல்லையா? இப்படிக் கூறியவரை எவ்வாறு வேட்பாளராக அறிவித்தார்கள். அவருக்காக எப்படி வேலை செய்ய முடியும். நெல்லை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் குறித்து ஏற்கெனவே கூறியிருந்தேன். அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு சீட் கொடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் கல்லூரி நடத்தி வருபவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. கட்சி அனுதாபி என்றால் எனக்குக்கூட நண்பர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களும் திமுக அனுதாபிகள்தாம், அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்படுமா?

  காசுக்கு விலைபோகிற வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். சேலத்தில் ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார், அவரைப் பற்றி இங்கே சொல்ல முடியாது. பெரம்பலூர், கள்ளக்குறிச்சி என பல இடங்களையும் கூற முடியும். வேட்பாளர் நேர்காணல் என்றால் கட்சியைப் பற்றி, கட்சிப் பணி குறித்தும் கேட்க வேண்டும். ஆனால், பணம் எவ்வளவு கொடுப்பீர்கள் எனக் கேட்கப்படுகிறது.

  கன்னியாகுமரி எம்.பி. ஹெலன் டேவிட்சன், தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரை ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டவர்கள். அவர்களிடம் என்ன குறை கண்டார்கள் எனத் தெரியவில்லை. என்னை கருணாநிதியின் முரட்டு பக்தர் என்று கே.பி.ராமலிங்கம் கூறியிருக்கிறார். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவாலயத்தில் சிலர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  வேலூர் தொகுதிக்கு உள்பட்ட கே.வி.குப்பத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். துரைமுருகனின் மகனுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதற்காக அவரது தூண்டுதலில் இவ்வாறு செய்துள்ளனர். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

  ஜெயலலிதாவுக்கு பாராட்டு:  இந்த விஷயத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன். ஆண்டுக்கு ஒரு மாவட்டச் செயலரை மாற்றுகிறார். ஆனால், திமுக ஜனநாயக முறைப்படி தேர்தல் என்கிறது; எதற்கு தேர்தல்? நிர்வாகிகள் பட்டியலை நேரடியாக அறிவித்துவிட வேண்டியதுதனே. தேனி தொகுதி வேட்பாளராக பொன்.முத்துராமலிங்கம் நிறுத்தப்பட்டுள்ளார். அவரெல்லாம் எப்படி வெற்றி பெற முடியும்? அவர் வேட்பாளர்  கிடையாது, எதிர்க்கட்சிகளிடம் கேட்பாளராக போய்விடுவார்.

  இப்படிப்பட்ட வேட்பாளர்கள் இருந்தால், திமுக நான்காவது இடத்துக்குச் செல்வது உறுதி.  பட்டியல் வெளியிட்டபோது திமுக தலைவர் கருணாநிதி, பட்டியலில் மாற்றம் இருக்கும் எனக் கூறியுள்ளார். தற்போது வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலை மாற்றி அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் வெற்றிபெறுவது கடினம் என்றார் அழகிரி.

  அழகிரியிடம் ஆதரவு கேட்ட தலைவர்கள்..!

  தில்லியில் நேரில் சந்தித்தபோது பாஜகவுக்கு ஆதரவு தருமாறு அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் கேட்டதாக, அழகிரி கூறினார்.

  இது பற்றி மேலும் அவர் கூறியது:

  தில்லியில் அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கச் சென்றபோது, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் என்னைச் சந்திக்க விரும்புவதாக நண்பர் மூலமாக தகவல் அனுப்பினார். கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது தற்போதைய சூழல் குறித்து என்னிடம் பேசினார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

  நான் இப்போதும் திமுகவில்தான் இருக்கிறேன். தாற்காலிகமாகத்தான் நீக்கப்பட்டுள்ளேன். என்னால் இப்போது எந்த முடிவையும் தெரிவிக்க இயலாது. ஆதரவாளர்கள் என்ன கூறுகிறார்களோ, அதன்படியே நடப்பேன் என்று அவரிடம் கூறினேன்.

  அண்மையில் என்னை சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, கட்சி நடவடிக்கை குறித்து வருத்தம் தெரிவித்தார். என்னை நேரில் வந்து சந்திப்பதாகவும் ஆதரவு அளிக்குமாறும் கேட்டார். ""வாருங்கள் பார்க்கலாம்'' என்றேன். இதேபோல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் என்னைத் தொடர்பு கொண்டு ஆதரவு தருமாறு கோரினார்.

  எனது ஆதரவாளர்களைக் கேட்காமல் எந்த முடிவையும் தெரிவிக்க மாட்டேன் என்று அவர்களிடம் தெரிவித்தேன் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai