சுடச்சுட

    

    "ஸ்மால் பஸ்'களில் இலை ஓவியம்: தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து அதிமுக வழக்குத் தொடர முடியாது: உயர் நீதிமன்றத்தில் வாதம்

    By dn  |   Published on : 18th March 2014 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Highcourt

    அரசு "ஸ்மால் பஸ்'களில் உள்ள இலை ஓவியங்களை மறைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்குத் தொடர முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வாதிடப்பட்டது.

    அரசு "ஸ்மால் பஸ்'களில் உள்ள இலை ஓவியங்களை அகற்றக் கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை மார்ச் 13-ஆம் தேதி நடந்தது. அப்போது, இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தை அதன் வழக்குரைஞர் ஜி.ராஜகோபால் தாக்கல் செய்தார்.

    அதில், அரசு "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியம் அதிமுகவின் சின்னம் போல தோற்றம் அளிக்கிறது. அதனால், அதிமுகவின் நடமாடும் பிரசார வாகனமாக அவை இடம் பெறாத வகையில் இலை வடிவ ஓவியத்தை மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அதிமுக சார்பில் வழக்குரைஞர் மனோஜ் பாண்டியன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

    "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியம் அரசியல் கட்சியின் பிரசார வாகனம் போன்று உள்ளதாகவும், அதை மறைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் முன்பு அதற்கான உரிய விளக்கம் அளிப்பதற்கு மனுதாரருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது மற்றும் நியாயமானது அல்ல. எனவே, அந்த முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை (மார்ச் 17) விசாரணைக்கு வந்தது.

    அதிமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, அரசு "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள இலைகளை மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பஸ்களில் இருப்பது இரட்டை இலை இல்லை. அதனால் அதை மறைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதாடினார்.

    தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்குரைஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டன. அரசு "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைப்பதற்கான முடிவு, தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து எடுக்கப்பட்டதாகும்.

    மேலும், அரசு "ஸ்மால் பஸ்'களில் உள்ள இலை ஓவியத்தை மறைக்கக் கூடாது என அதிமுக வழக்குத் தொடர முடியாது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, அரசு தான் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும்.

    பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார்கள் கொடுத்திருந்தனர். எனவே, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடப்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது என அவர் வாதாடினார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai