3 ஆவணங்களுடன் ரூ.10 லட்சம் வரை வர்த்தகர்கள் எடுத்துச் செல்ல அனுமதி: பிரவீண்குமார்
By dn | Published on : 18th March 2014 03:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மூன்று முக்கிய ஆவணங்களுடன் ரூ.10 லட்சம் வரை எடுத்துச் செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, தகுந்த ஆவணங்களை வரையறுப்பது இயலாது என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், தற்போது, வாகனச் சோதனையின் போது காட்டப்பட வேண்டிய ஆவணங்கள் எவை எவை என்பதை விளக்கியுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திங்கள்கிழமை கூறியதாவது:
அரசியல்வாதிகளும், கட்சிப் பிரமுகர்களும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக எடுத்துச் செல்லக் கூடாது. வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் ரூ.10 லட்சம் வரை உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் எடுத்துச் சென்றால் வருமான வரித் துறையினர் கேட்கும் ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும்.
வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பணத்தை எடுத்துச் செல்லும் போது, தாங்கள் செய்யும் வணிகம் அல்லது வர்த்தகத்தை உரிய அரசுத் துறையிடம் பதிவு செய்ததற்கான ஆவணம், கையில் வைத்திருக்கும் பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான சான்று, அண்மையில் வணிகம் செய்ததற்கான ரசீது ஆகியவற்றை கையில் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணங்களைக் காட்டினால் சோதனையின் போது பணம் பறிமுதல் செய்யப்படாது.
மேலும், இந்த ஆவணங்கள் மூலமாக அவர்கள் உண்மையில் வியாபாரம் செய்யத்தான் பணத்தைக் கொண்டு செல்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படும். இந்தத் தகவல்கள் அடங்கிய விவரங்கள் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்: தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகள் உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் இரண்டு இயந்திரங்களை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படலாம். வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்பட்டால் அண்டை மாநிலங்களில் இருந்து பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பந்தல், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பறக்கும் மற்றும் கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பா? தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மட்டுமே வாக்குப் பதிவுக்கான நேரம் இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேரத்தை அதிகரிப்பதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை என்றார் பிரவீண்குமார்.