Enable Javscript for better performance
இலங்கை சிறையிலிருந்து விடுதலை: தமிழக மீனவர்கள் 116 பேர் காரைக்கால் வந்தனர்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை சிறையிலிருந்து விடுதலை: தமிழக மீனவர்கள் 116 பேர் காரைக்கால் வந்தனர்

    By dn  |   Published on : 19th March 2014 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fishermen

    இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 116 பேர் காரைக்கால் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்துசேர்ந்தனர்.

    தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்ள் 2 படகுகளிலும், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 36 மீனவர்கள் 9 படகுகளிலும், ராமேசுவரத்தைச் சேர்ந்த 51 மீனவர்கள் 9 படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள் 5 படகுகளிலும், நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 4 மீனவர்கள் 1 படகிலும் கடந்த பிப்ரவரி மாதம் 2, 4, 13-ஆம் தேதிகளில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தொடர்வதில் சிக்கல் இல்லாமல் இருக்க, இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.

    இதனடிப்படையில், மீனவர்கள் 116 பேர் கடந்த 16-ஆம் தேதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம், அவர்களது படகுகளையும் விடுவித்து உத்தரவிட்டது.

    26 படகுகளுடன் மீனவர்கள் 116 பேரும் காங்கேசன் துறைமுகத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ராஜ்தரங் என்ற கப்பலில், படகுகள் பின்தொடர காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு வந்துசேர்ந்தனர்.

    இதைத்தொடர்ந்து, காலை 7 மணியளவில் இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் உதல்சிங், மீனவர்களையும், அவர்களது படகுகளையும் அந்தந்த மாவட்ட மீனவளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    மீனவர்கள் வேதனை: படகில் வைத்திருந்த பொருள்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. சிறையில் இருந்தபோது, சுகாதாரமான உணவு தரப்படவில்லை. எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர் மீனவர்கள்.

    தமிழ்நாடு மீனவர் சங்க ஆலோசகர் தேவதாஸ் கூறும்போது, 5 படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. அவற்றையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai