Enable Javscript for better performance
\\\"சுங்கம்\\\' ரக மீன்கள் சிக்கின: மீனவர்கள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    
    fish

    ஏற்றுமதி தரம் வாய்ந்த சுங்கம் ரக (டூனா பிஷ்) மெகா சைஸ் மீன்கள் செவ்வாய்க்கிழமை அதிகளவில் சிக்கியதால், புதுவை மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மீன்பிடி தடைக்காலம் அடுத்த மாதம் வர உள்ள நிலையில், புதுவை மீனவர்கள் மீன் பிடி தொழிலில் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும் மீன் வளமின்மை காரணமாக சிறு விசைப்படகுகளை நம்பியுள்ள பல மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆழ்கடல் மீன்வளத்தை நம்பியுள்ள மீனவர்கள் ஓரளவுக்கு புதிய ரக மீன்களை பிடித்து வந்து தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் அண்மையில் ஆழ்கடலுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை திரும்பிய புதுவை மீனவர்கள், அரிய வகை சுங்கம் ரக (டூனா பிஷ்) மீன்களை அள்ளி வந்துள்ளனர்.

    புதுவை நல்லவாடு முருகசாமியின் விசைப் படகில் சென்று திரும்பியுள்ள மீனவர்கள் கூறியது: நாங்கள் கடந்த 15 நாள்களுக்கு முன் விசைப்படகில் சென்று ஆழ்கடலில் தூண்டியலிட்டு அரிய வகை சுங்கம் ரக மீன்களை பிடித்து வந்துள்ளோம்.

    ஏற்றுமதி தரம் வாய்ந்த இந்த மீன்கள் கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் வெளி நாடுகளுக்கு இந்த மீன்கள் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த மீன்கள், 15 கிலோ முதல் 100 கிலோ எடை அளவில் இருக்கும். தற்போது 50 கிலோ முதல் 90 கிலோ அளவுடைய மீன்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.

    எங்களுக்கு முன்பு, நேற்று வந்த மீனவர்களிடம் மொத்தம் 7 டன் அளவில் 300 மீன்கள் வரை கிடைத்துள்ளன. அவை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எங்களிடம் 130 மீன்கள் வரை (3 டன்கள்) கிடைத்துள்ளன. இதுவும் எடையிட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உதவியுடன் இந்த பெரிய மீன்களை நாங்கள் தூண்டில் போட்டு பிடித்து வந்துள்ளோம். மாமல்லபுரம், ஒடிஸா கடல் பகுதியில் இந்த வகை மீன்கள் கிடைக்கின்றன.

    இவை ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. தற்போது கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகை காலம் என்பதால் மீன் பயன்பாடு குறைந்து விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

    தற்போது சீசன் என்பதால் அதிகளவு மீன்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் ஆழ்கடலுக்குச் சென்று வருவதால் செலவினம் அதிகரிக்கிறது. மீன் கிடைக்காமல் போனால், நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai