சுடச்சுட

  

  துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து: என்எல்சியில் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

  By dn  |   Published on : 19th March 2014 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளியை சுட்டுக்கொன்ற, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை வெளியேற்ற வலியுறுத்தி, என்எல்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

  மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எப்) கண்டித்து நெய்வேலியில், வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி டவுன் ஷிப் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி ராஜா என்ற ராஜ்குமார் (35), மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் முகமத்நோமன் என்பவரால் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து நெய்வேலியில் கலவரம் ஏற்பட்டது.

  போலீஸார் தடியடி நடத்தியதில் 38 பேர் காயமடைந்து, என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதில் 14 பேர் மேல்சிகிச்சைக்காக, சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களின் செயலையும், போலீஸாரின் நடவடிக்கையையும் கண்டித்து நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பும், பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

  மின் உற்பத்தி பாதிப்பு: மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் போலீஸாரைக் கண்டித்து என்எல்சி ஊழியர்கள் திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வரை மேற்கொண்ட ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தின் காரணமாக, மொத்த மின் உற்பத்தியான 2,490 மெகாவாட்டில், 150 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்தது.

  நெய்வேலியில் டிஐஜி, எஸ்பி. முகாம்: நெய்வேலியில் நிலவிவரும் பதற்றத்தைத் தொடர்ந்து, கடலூர் எஸ்பி ஆ.ராதிகா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக விழுப்புரம் சரக டிஐஜி எஸ்.முருகன் தெரிவித்தார்.

  நோமன் சிறையில் அடைப்பு: துப்பாக்கிச் சூடு நடத்திய சிஐஎஸ்எப் வீரர் முகமத்நோமனை திங்கள்கிழமை இரவு கொலை வழக்கின் கீழ் கைது செய்த மந்தாரக்குப்பம் போலீஸார், செவ்வாய்க்கிழமை நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  உடலை வாங்க மறுப்பு: கொலை செய்யப்பட்ட ராஜ்குமாரின் உடல், கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடலை வாங்க ராஜ்குமாரின் உறவினர்கள் மறுத்துவிட்டதால், சடலம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

  சங்கங்களின் கோரிக்கைகள்: நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய அண்ணா தொழிற்சங்கம், தொமுச நிர்வாகிகள், இறந்த தொழிலாளியின் மனைவிக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், நிவாரணத் தொகை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், பாதுகாப்புப் பணியில் தமிழ் தெரிந்த வீரர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மத்திய தொழிலக பாதுகாப்பு படை டிஐஜி ஆனந்தமோகன், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நுழைவு வாயிலில் தமிழ்தெரிந்த வீரர் மட்டுமே நிறுத்தப்படுவார் என்றும் உறுதியளித்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  ரூ.5.50 லட்சம் இழப்பீடு, மனைவிக்கு நிரந்தர வேலை: இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வரை நிர்வாகத்தோடு நடந்த பேச்சுவார்த்தையில், கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.5லட்சம் இழப்பீடும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு ரூ.50 ஆயிரமும், அவரது மனைவிக்கு நிரந்தர பணி வழங்கவும் நிர்வாகம் ஒப்புதல் அளித்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai