சுடச்சுட

  

  "நோட்டா'வுக்கு தனி சின்னம்: ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

  By dn  |   Published on : 19th March 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nota

  "நோட்டா'வுக்கு தனி சின்னம் உருவாக்குவது பற்றி இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனில் தேர்தல் நடத்தை விதிகளின் படி 49-ஓ வினை பயன்படுத்தி தெரியப்படுத்தலாம். இதற்கு வாக்காளர்கள் 17-ஏ என்ற படிவத்தைப் பயன்படுத்தி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இந்த முறையின் மூலம் வாக்காளர்கள் தங்களின் ரகசியத் தன்மை பாதிப்பதாக கருதினர்.

  வாக்காளர்களின் ரகசியத் தன்மையை காக்கும் விதமாக உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் "நோட்டா' பட்டனை உருவாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் "நோட்டா' பட்டனை அழுத்தினால் மட்டும் போதும். இதன் மூலம் வாக்காளர்களின் ரகசியத் தன்மை காக்கப்படும்.

  வாக்கப்பதிவின்போது ஓட்டு போடும் இயந்திரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் "நோட்டா' பட்டன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் "நோட்டா'வுக்கென தனி சின்னம் ஏதும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

  புதுதில்லி, மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் இந்த நோட்டா பட்டன் பயன்படுத்தப்பட்டது. முதல் முறையாக தற்போது மக்களவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக வழக்குரைஞர் எஸ்.சத்யசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் விவரம்:

  இந்தியாவில் படிப்பறிவில்லாதவர்களும் பயன்படுத்தும் நிலையில் நோட்டா பட்டன் இல்லை. நோட்டா பட்டன் இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை. ஆதலால் தேர்தல் ஆணையம் நோட்டாவுக்கென தனிச் சின்னத்தினை உருவாக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  வரவிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் அச்சு, மின்னணு ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் மூலம் "நோட்டா' சின்னம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தினை செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

  அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி "இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2 நாள்களுக்கு முன்பு கூட "நோட்டா' குறித்து விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டுள்ளோம். இது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையம் அளிக்க கால அவகாசம் வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "நோட்டா'வுக்கு தனி சின்னம் மற்றும் "நோட்டா' குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai