Enable Javscript for better performance
விலைவாசி உயர்வைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: முதல்வர் ஜெயலலிதா பேச்சு- Dinamani

சுடச்சுட

  

  விலைவாசி உயர்வைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: முதல்வர் ஜெயலலிதா பேச்சு

  By dn  |   Published on : 19th March 2014 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் அரசுடன் அங்கம் வகித்து விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருந்துவிட்டு இப்போது விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

  திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.வனரோஜாவை ஆதரித்து திருவண்ணாமலையை அடுத்த அம்மாபாளையத்தில் பிரசார பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:

  வரும் மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்கள், பொருளாதாரச் சீரழிவு, ஊழல் சாம்ராஜ்யம் ஆகியவற்றில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான தேர்தல். உங்களுடைய துன்பங்கள், துயரங்களைப் போக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள்.

  காங்கிரஸ் ஆட்சியின் அவலங்கள்: மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விலைவாசி உயர்வு, பண வீக்கம், இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சி, மாதம்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை, வேளாண் உற்பத்தியில் மந்த நிலை போன்றவற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசு: அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. நாட்டின் பாதுகாப்புத் துறையைக் கூட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு விட்டுவைக்கவில்லை. இதுபோன்ற மோசமானதொரு அரசை நாம் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது.

  உலக அளவில் தமிழ்நாட்டுக்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று நடத்திய கட்சி திமுக. இப்படி காங்கிரஸ், திமுக இணைந்து ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிராக செயல்பட்டதால் நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்து விட்டது.

  மின் திட்டங்கள்: கடந்த 33 மாத அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் மீறி, தமிழக மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செய்துள்ளேன்.

  கடந்த திமுக ஆட்சியில் சரியாகத் திட்டமிடாததால் நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கடும் மின் பற்றாக்குறை நிலவியது. மின் பற்றாக்குறையைப் போக்க இப்போது 2,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது.

  3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் கொள்முதல் செய்யவும், 5,300 மெகாவாட் அளவுக்கு புதிய மின் திட்டங்களைச் செயல்படுத்தவும், தென் மாவட்டங்களில் தொழில் முனைவோரின் நலனுக்காக தொழிற்பூங்காக்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  உணவு தானிய உற்பத்தியில் 101.52 லட்சம் மெட்ரிக் டன் சாதனையை எட்டியதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது.

  சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, வறட்சி நிவாரணமும் வழங்கிய ஒரே மாநில அரசு தமிழ அரசுதான்.

  மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 9 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுக, இப்போது அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டபோது மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த கருணாநிதி, இப்போது இந்த விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்துவதாக வாக்குறுதி கொடுக்கிறார். யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? தமிழக மக்களை ஏமாளிகள் என்று கருணாநிதி நினைக்கிறாரா?

  டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்: உங்களை ஏமாற்ற நினைக்கும் திமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் இனிமேல் எழுந்திருக்க முடியாத அளவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த காங்கிரஸ் கட்சியை அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

  மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியாவின் முதலீடுகள், ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்புக் கணக்கில் அதிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் தேவை.

  மீனவர் பிரச்னை, அண்டை மாநில நதி நீர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பிரச்னைகளுக்கு தமிழக அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு மத்திய அரசுதான் தீர்வு காண வேண்டும்.

  இப் பிரச்னைகளைத் தீர்க்காத மத்திய அரசு, இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்களை அளித்து அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதுபோன்ற ஏராளமான துரோகங்களை மத்திய காங்கிரஸ் அரசு செய்துள்ளது.

  கருணாநிதிக்குக் கேள்வி: திமுகவின் தேர்தல் அறிக்கையில், அரசின் கொள்கை முடிவுகளில் அரசு சாராத நிறுவனங்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்த உரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள திமுக வலியுறுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  அப்படியென்றால், திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பிற தலையீடுகளின் பேரில் கொள்கை முடிவுகளை எடுத்ததா? அரசு சாரா நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான கொள்கை முடிவுகளை எடுக்க மத்திய அரசை வற்புறுத்தியதா? எந்தெந்த அரசு சாரா நிறுவனங்கள் மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டன? அவற்றின் தலையீட்டால் என்ன கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

  இது பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு முழு உரிமை உண்டு. இதை விளக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு கருணாநிதிக்கு உண்டு.

  காங்கிரஸ் அரசுடன் அங்கம் வகித்து விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருந்துவிட்டு இப்போது விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது?

  விலைவாசி உயர்வுக்கு மூல காரணமான மத்திய காங்கிரஸ் அரசையும், இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய திமுகவையும் வேரும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்.

  வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்தால் இந்திய நாட்டை வல்லரசாக்கக் கூடிய வலிமையான ஆட்சி மத்தியில் அமையும். அதிமுக அங்கம் வகிக்கும் புதிய மத்திய அரசால் உங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai