சுடச்சுட

    
    praveen_kumar

    ஃபேஸ்புக் உள்பட சமூக ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதியை அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

    இதற்கான அனுமதியைக் கோரி இரு கட்சிகளும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

    மாநிலத்தில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறையில் உள்ளன. கடந்த 17 ஆம் தேதி வரையிலான காலத்தில், அரசு பொது சொத்துகளில் விளம்பரம் செய்தது உள்பட தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 34 ஆயிரத்து 254 புகார்களும், தனியார் சொத்துகளில் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக 20 ஆயிரத்து 722 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், சுவர் விளம்பரம் குறித்த புகார்கள் மட்டும் (அரசு மற்றும் தனியார் உள்பட) 52 ஆயிரத்து 258 ஆகும். அவற்றில், அரசு சொத்துகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 74 வழக்குகளும், தனியார் சொத்துகளில் விதி மீறல்கள் குறித்து 32 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பறிமுதல் செய்த ரொக்கம்: தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து மாநிலத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளின் மூலம், ரூ.10 கோடியே 25 லட்சத்து 69 ஆயிரத்து 324 ரொக்கமும், ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 860 ரூபாய் மதிப்பிலான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

    அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகமாக கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிகர்களும், பொது மக்களும் ரூ.10 லட்சம் வரை உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லலாம். சோதனையின்போது, மூன்று வகையான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்தால் போதுமானது.

    வணிகம் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஆவணச் சான்று (வணிக வரித் துறை போன்று பிற துறைகள் வழங்குபவை), எடுத்துச் செல்லப்படும் பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான ரசீது, எந்த பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்படுகிறது போன்ற விவரங்களை அளித்தால் போதும். ரூ.10 லட்சத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும்போது, வருமான வரித் துறையினர் வகுத்துள்ள விதிகளின்படி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்பவ இடத்துக்கு வருமான வரித் துறையினர் வருவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரமானால் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் வணிகர்கள் மற்றும் பொது மக்களின் பணத்தை சம்பவ இடத்திலேயே திருப்பி அளிக்க வேண்டும். வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று அதன்பின் திருப்பி அளிக்கக் கூடாது. அப்படிச் செய்யும் அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கவும், வாகனச் சோதனைகளை நடத்தவும் பறக்கும் மற்றும் கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 705 பறக்கும் படைகளும், 705 கண்காணிப்புப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

    சமூக ஊடகங்கள்: ஃபேஸ்புக், இணையதளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு முன்பு அதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற வேண்டும். தமிழகத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தன. அந்தக் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என்றார் பிரவீண்குமார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai