சுடச்சுட

  

  அழகிரியுடன் தொடர்பு வைத்தால் நடவடிக்கை: திமுக எச்சரிக்கை

  By dn  |   Published on : 20th March 2014 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anbalagan

  மு.க.அழகிரியுடன் எவ்விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் எச்சரித்துள்ளார்.

  இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  திமுக போற்றி வளர்த்து வரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அதை என்றைக்கும் திமுக தலைமை பொறுத்துக் கொள்ளாது.

  திமுகவின் கடந்த கால வரலாற்றைத் தெரிந்தவர்கள் இதை உணர்வார்கள்.

  இன்றைய சூழ்நிலையில் திமுகவிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி திமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

  அவர் தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசும் சந்திப்பு என்ற பெயரில் ஆங்காங்கே கூட்டங்களை ஏற்பாடு செய்து, திமுகவின் தோழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் செய்தி தலைமைக்குக் கிடைத்து வருகிறது.

  கட்சியிலிருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியுடன் எந்தவிதமான தொடர்பும் திமுகவினர் யாரும், எந்தப் பொறுப்பில் உள்ளவர்களாயினும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை மிகவும் கண்டிப்புடன் தெரிவிக்கிறேன்.

  இந்த அறிக்கையை மீறி, திமுகவினர் எவரும் செயல்படுவதாக தலைமைக்குத் தகவல் வருமேயானால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

  தென்மண்டல அமைப்புச் செயலாளர் உள்பட திமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி ஜனவரி 24-ஆம் தேதி தாற்காலிகமாக நீக்கப்பட்டார்.

  திமுக கூட்டணியில் சேர நினைக்கும் கட்சியின் (தேமுதிக) தலைமைக்கு எதிராக அவதூறு பேசி கூட்டணி ஏற்படுவதை அழகிரி குலைக்க முயற்சித்தன் காரணமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அப்போது தெரிவித்தது.

  மேலும், திமுகவினர் சிலர் மீது பி.சி.ஆர். எனும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய, அழகிரி துணையாக இருந்ததாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு திமுக தலைமை காரணம் கூறியிருந்தது.

  அதன்பின், திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி ஒன்றில், ஸ்டாலின் உடல் நலம் தொடர்பாக அழகிரி முறையற்ற முறையில் பேசியதாகவும் குற்றம்சாட்டினார்.

  இந்தக் குற்றச்சாட்டை மு.க.அழகிரி "அபாண்டமானது' என மறுத்து வருவதுடன், திமுக தலைமைக்கு எதிராகத் தொடர்ந்து குற்றசாட்டுகளைக் கூறி வருகிறார்.

  மக்களவைத் தேர்தலில் பணம் கொடுத்தவர்களுக்கே சீட்டுகள் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்து வருகிறார்.

  பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நடிகர் ரஜினிகாந்த உள்ளிட்டோரைச் சந்தித்து பேசி வருவதுடன், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அழகிரி ஈடுபட்டு வருகிறார்.

  இந்நிலையிலேயே மு.க.அழகிரியுடன் தொடர்பு வைத்துக் கொண்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று க.அன்பழகன் எச்சரித்துள்ளார்.

  அறிக்கை யாருக்காக?: மு.க.அழகிரி வெளிப்படையாகப் பேட்டி அளித்து வருகிறார். ஆனால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை வெளியிடாமல், திமுகவின் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  உண்மையில், இந்த அறிக்கையை அழகிரியோடு இணைந்து செயல்பட்டு வரும் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்துக்கு எதிராக திமுக தலைமை விடுத்த எச்சரிக்கை என அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. கே.பி.ராமலிங்கம் தற்போது திமுகவில் விவசாய அணிச் செயலாளராக உள்ளார். மு.க.அழகிரியோடு இணைந்து இனி பொது நிகழ்வுகளில் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றால், அவரை நீக்க திமுக திட்டமிட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai