சுடச்சுட

    

    அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இருக்கும் சிட்டுக்குருவிகள் இனத்தைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பரவலாக அதிகரித்து வருகிறது. உடன்குடியைச் சேர்ந்த அண்ணன்-தங்கை இருவரும் இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

    அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் சிட்டுக்குருவிகள் இனமும் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட்டம் கூட்டமாக சிறகடித்துப் பறந்த சிட்டுக்குருவிகளை தற்போது காணமுடிவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணும் அளவிலான குருவிகளே காணப்படுகின்றன.

    தற்காலத்தில் செடிகள், மரங்களுக்கு ரசாயன பூச்சிகொல்லி மருந்துகளை அடிக்கின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை செடிகள், மரங்களை சிறிய அளவில் தோண்டினாலே புழுக்கள் அதிகமாக கிடைக்கும். சிட்டுக்குருவிகள் குஞ்சு பொரித்த முதல் 15 நாள்களுக்கு அதன் முக்கிய உணவு சிறு புழுக்கள்தான்.

    ஆனால், இன்றைய ரசாயன மருந்துகளின் வீரியத்தால் இப்புழு வகைகளும் குறைந்துவிட்டன. இதனால் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவு கிடைப்பதில்லை. அரிசி மாவில் போடும் கோலமும் இந்த சிட்டுக்குருவிகளுக்கு ஓர் உணவுதான். இப்போது அரிசி மாவு கோலத்தை விடுங்கள், காலத்தின் கோலத்தால் கோலம் போடும் பழக்கமே குறைந்துவரும்போது, சிட்டுக்குருவிகளுக்கு உணவு எங்கே கிடைக்கும்.

    மேலும், தற்காலத்தில் வீடுகள், கட்டடங்கள் கான்கிரீட் அமைத்துக் கட்டப்படுவதால் சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான வசதிகள் இல்லை. ஓட்டுவீடுகள், சுவரில் பொந்து, இடைவெளி வைத்து கட்டப்படும் வீடுகளில்தான் குருவிகள் கூடுகட்டும். இதுபோல, முன்பு கிணற்றுநீர் பயன்பாடு அதிகளவில் இருந்தது. தண்ணீர் சிதறிய தோட்டங்களில் தங்களது தண்ணீர்த் தேவையையும் சிட்டுக்குருவிகள் தணித்துக்கொண்டன. இப்போது கிணறுகள் வறண்டு சிட்டுக்குருவிகளுக்கான குடிநீர் ஆதாரமும் இல்லை. கான்கிரீட் கட்டடங்களால் வசிப்பிடத்தையும் இழந்து சிட்டுக்குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருகிறது. இப்போது பெருகிவிட்ட செல்போன் கோபுரங்களும் அதன் அழிவுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

    மீட்கும் முயற்சியில் அண்ணன், தங்கை: அழிவின் விளிம்பிலிருந்து சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பரவலாக அதிகரித்து வரும் நிலையில், உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்த கோவில்பிச்சை என்பவரின் மகன் ஜேசுராஜ் (21), மகள் தனீஷ் (18) ஆகிய இருவரும் தங்களது பங்களிப்பை சீரிய முறையில் செய்துவருகின்றனர்.

    கல்லூரியிலும் விலங்கியல் துறையை தேர்வு செய்து படித்து வரும் இவர்கள், பறவைகள் விழிப்புணர்வுகுறித்த பல்வேறு கருத்தரங்குகள், முகாம்களிலும் பங்கேற்று வருகின்றனர். சிட்டுக்குருவிகளின் வாழ்விடத்தை மீட்டெடுக்கும் பல்வேறு முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    சிட்டுக்குருவிகளுக்கான மண்சட்டிக் கூண்டுகளைத் தயாரித்து இலவசமாக வீடுகள், கடைகளுக்கு கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமன்றி மக்களிடம் சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்புணர்வு, அதனைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விவரித்து வருகின்றனர்.

    "வீடுகள், தோட்டங்களில் வைக்கப்படும் இந்த மண்சட்டிக் கூடுகளை, சிட்டுக்குருவிகள் தங்களுக்கான பாதுகாப்பான இருப்பிடமாக உணர்ந்து அதில் தங்கிச் செல்கின்றன. சிட்டுக்குருவிகள் இந்த மண்சட்டிக் கூடுகளில் தங்கிச் செல்வதாக பலர் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்கின்றனர் இருவரும்.

    சிட்டுக்குருவிகளிலேயே தேன்சிட்டு, சிட்டுக்குருவி, கருங்குருவி, வாலாட்டிக்குருவி, இரட்டைவால் குருவி, மைனா, காகம், வெண்கழுத்து மீன்கொத்தி, மணிப்புறா, செம்போத்து என பல்வேறு இனங்கள் இருப்பதாக ஜேசுராஜ் கூறுகிறார்.

    இவர்களைப்போன்று அனைத்து ஊர்களிலும் பறவைகள் ஆர்வலர்கள் இருந்தால் பறவைகள் இனமே அழியாது பாதுகாக்கப்படும் நிலை ஏற்படும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai