சுடச்சுட

    

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் பதில்

    By dn  |   Published on : 20th March 2014 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது ஆணையத்தின் உத்தரவில் தலையிடவோ, கேள்வி எழுப்பவோ முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள ஓவியத்தை மறைக்கக் கோரிய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அதிமுக சார்பில் வழக்குரைஞர் மனோஜ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்:ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதனால், இது தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கு மனுதாரரின் கட்சிக்கு எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஏனெனில் இந்த விஷயம் முழுவதும் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே உள்ளதாகும். இதில், மனுதாரரின் கட்சி வரத் தேவையில்லை.

    மேலும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது அவர்கள் கேள்வி எழுப்ப முடியாது. இது போன்று ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு நிலையிலும் வாய்ப்பு வழங்கினால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முடியாது.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் யாரும் தலையிடவோ, கேள்வி எழுப்பவோ முடியாது. எம்.ஜி.ஆர். சமாதியை மறைப்பதற்கான தேவை தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படவில்லை. ஏனென்றால் அதன் அருகில் எந்தவொரு வாக்குச் சாவடியும் இல்லை. அதனால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

    பஸ் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்லக் கூடியது. அதனால், எம்.ஜி.ஆர். சிலைக்கான உத்தரவை இதனுடன் ஒப்பிடக் கூடாது. அனைத்துச் சூழ்நிலைகளையும் பரிசீலனை செய்துதான் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு வியாழக்கிழமை (மார்ச் 20) மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai