சுடச்சுட

    

    தேர்தல் பாதுகாப்பு: தமிழகத்துக்கு துணை ராணுவத்தினர் வருகை

    By dn  |   Published on : 20th March 2014 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு துணை ராணுவத்தினர் புதன்கிழமை முதல் வரத் தொடங்கினர்.

    இது குறித்த விவரம்:

    தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இதையொட்டி தேவையான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதேவேளையில் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை ஆலோசனை செய்து வருகிறது. மேலும் வாக்குக்கு பணம் வழங்குவது, இலவச பொருள்கள் வழங்குவது ஆகியவற்றை தடுப்பதற்காக தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியிலும், தலைவர்கள் பிரசார பாதுகாப்பு பணியிலும் இப்போது போலீஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக தேர்தல் பிரசாரம் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காக 32 கம்பெனி துணை ராணுவத்தினரை தமிழக காவல்துறையும், தேர்தல் ஆணையமும் வரவழைக்க உள்ளது. இதில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னைக்கு ரயில் மூலம் புதன்கிழமை வந்தனர். இதில் ஒரு கம்பெனி படை திருச்சிக்கும், மற்றொரு கம்பெனி படை திருவாரூருக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    மீதம் உள்ள 30 கம்பெனி துணை ராணுவத்தினரும் ஓரிரு நாள்களில் தமிழகத்துக்கு வந்துவிடுவார்கள் என காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இதில் 12 கம்பெனி துணை ராணுவ படையினர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மீதியுள்ள 20 கம்பெனி துணை ராணுவ படையினர் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் ஒரு கம்பெனியில் 60 வீரர்களில் இருந்து 100 வீரர்கள் வரை இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலுக்கு 200 கம்பெனி:

    இது தவிர தேர்தலில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் தடுக்கவும், பாதுகாப்பு பணிக்காகவும் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்படுகின்றனர். இவர்கள் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு தமிழகத்துக்கு வருவார்கள் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. துணை ராணுவப் படையினர், பதற்றமான வாக்குச்சாவடிகளிலும், முக்கியத்துவம் வாய்ந்த வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai