Enable Javscript for better performance
பாஜக கூட்டணியில் பாமக நீடிக்குமா? ராஜ்நாத் சென்னையில் இன்று அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாஜக கூட்டணியில் பாமக நீடிக்குமா? ராஜ்நாத் சென்னையில் இன்று அறிவிப்பு

    By dn  |   Published on : 20th March 2014 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Rajnath

    கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 20) பகல் 12.30 மணிக்கு அறிவிக்கிறார்.

    அப்போது பாஜக கூட்டணியில் பாமக தொடருமா என்று அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் கேள்விக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3-ஆவது அணி அமைக்க திட்டமிட்ட பாஜக, கடந்த 2013 செப்டம்பர் மாதமே அதற்கான முயற்சியைத் தொடங்கியது. காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் - விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகியோரைச் சந்தித்து பாஜக கூட்டணியில் இணைய வலியுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மைத்துனர் எல்.கே. சுதீஷ், பாமக தலைவர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை சந்தித்துப் பேசினர்.

    கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வண்டலூரில் நடைபெற்ற பாஜக பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்றார். அதற்குள் கூட்டணியை இறுதி செய்து மோடியுடன் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகியோரை மேடையேற்ற பாஜக திட்டமிட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

    இந்நிலையில் மார்ச் 7-ஆம் தேதி தேமுதிக, பாமகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கியது.

    பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாத நிலையில் மார்ச் 14-ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த, 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

    இது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக தலைவர்கள் மீண்டும் பேச்சு நடத்தினர். அதில் தேமுதிகவுக்கு 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

    ஆனால், மார்ச் 16-ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தார். விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் போட்டியிட இருப்பதாகக் கூறப்படும் சேலம் தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளரையும் அவர் அறிமுகம் செய்தார்.

    இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட ராமதாஸ் முடிவு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

    திருப்பூர் தொகுதி கிடைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் அறிவித்திருந்தார்.

    இந்தக் குழப்பங்களால் பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடியாமல் இழுபறி நீடித்தது. இந்நிலையில் உத்தேசத் தொகுதிப் பட்டியலுடன் பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எஸ். மோகன்ராஜூலு ஆகியோர் புதன்கிழமை தில்லி சென்றனர். அங்கு ராஜ்நாத் சிங்கிடம் ஆலோசனை நடத்தி பட்டியலை இறுதி செய்ய உள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை (மார்ச் 20) சென்னை வரும் ராஜ்நாத் சிங், பகல் 12.30 மணிக்கு தொகுதிப் பங்கீட்டை முறைப்படி அறிவிக்க இருப்பதாக தமிழக பாஜக அலுவலகம் அறிவித்துள்ளது.

    பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு 99.5 சதவீதம் முடிந்து விட்டதாக அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ், ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். ஆனாலும் பாமக சில தொகுதிகளை விடாப்பிடியாக கேட்பதால் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    தொகுதிப் பங்கீட்டை ராஜ்நாத் அறிவிக்கும்போது பாஜக கூட்டணயில் பாமக தொடருமா? என்று அரசியல் வட்டாரத்தில் பல நாள்களாக நீடித்து வரும் வினாவுக்கு விடை கிடைக்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai