சுடச்சுட

    

    பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திமுக குரல் கொடுக்காதது ஏன்?

    By dn  |   Published on : 20th March 2014 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya_canvas

    மத்திய அரசில் 17 ஆண்டுகாலம் அங்கம் வகித்த திமுக, பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த குரல் கொடுக்காதது ஏன் என, தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

    தென்காசி (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசனுக்கு ஆதரவாக சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

    அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் நிலவிய மின் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் பயனாக இப்போது கூடுதலாக 2,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 5,300 மெகாவாட் உற்பத்திக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், தமிழகம் மின் உற்பத்தியில் மின் மிகை மாநிலமாகவும், தன்னிறைவு பெற்ற மாநிலமாகவும் மாறும்.

    ஆனால், திமுக தலைவர் கருணாநிதி எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், உடன்குடி அனல் மின்நிலையம், உப்பூர் அனல் மின்நிலையம், தூத்துக்குடி 4ஆம் நிலை திட்டம் குறித்து அதிமுகவை விமர்சனம் செய்து கேள்வி எழுப்புகிறார்.

    திமுக காரணம்: உடன்குடி அனல் மின் திட்டம் தாமதமானதற்கு திமுக ஆட்சியே காரணம். இந்தத் திட்டத்துக்கு பாரத மிகுமின் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் 26.10.2007-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், மூன்றரை ஆண்டு காலமாக இந்தத் திட்டத்தை தொடங்க திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு 26.3.2013-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டு திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஆய்வில் உள்ளன. விரைவில் பணி ஆணை வழங்கப்படும். உப்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அங்கீகாரத்தைப் பெற வேண்டியுள்ளது.

    தூத்துக்குடி 4ஆம் நிலை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைந்தவுடன் இந்தத் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி பெறப்படும்.

    மண்டல் கமிஷன் அறிக்கை: பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கை 17 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கை 1993-ல் வந்தது. மத்திய அரசின் ஏ,பி,சி,டி நிலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. 21 ஆண்டு காலம் நடைமுறைப்படுத்தப்படுவதுகூட தெரியாமல் 17 ஆண்டு காலம் முழுமையாக அமல்படுத்தாமல் உள்ளதாக திமுக குறிப்பிட்டுள்ளது. அந்த 17 ஆண்டு காலமும் திமுகதான் மத்தியில் அங்கம் வகித்து வந்தது.

    அப்போது ஏன் 27 சதவீதம் முழுமையாக அமல்படுத்தவில்லை எனக் குரல் கொடுக்கவில்லை? குறைந்தபட்சம் மத்தியில் திமுக அங்கம் வகித்த அமைச்சகங்களில்கூட இந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை.

    கருணாநிதியின் தன்னலம்: தனது பேரனுக்காகவும், திமுகவினருக்காகவும் விரும்பிய துறைகளைக் கேட்டுப்பெற்ற கருணாநிதி, மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க மடிப்பிச்சை கேட்டார்.

    கருணாநிதிக்கு இடஒதுக்கீடு குறித்தெல்லாம் எந்த அக்கறையும் இல்லை. அரசியலில் தனக்கு என்ன இடம் கிடைக்கிறது என்பதிலும், தன்னலத்திலுமே அக்கறை கொண்டவர் என்றார் ஜெயலலிதா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai