சுடச்சுட

    

    பூச்சாண்டி வேலைக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்: அழகிரி பதிலடி

    By dn  |   Published on : 20th March 2014 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Alagiri

    ஒழுங்கு நடவடிக்கை என பூச்சாண்டி காட்டுவதற்கெல்லாம் எனது ஆதரவாளர்கள் அஞ்ச மாட்டார்கள் என்று தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலரும், மதுரை மக்களவை உறுப்பினருமான மு.க.அழகிரி கூறினார்.

    திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரி, தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை மதுரையில் திங்கள்கிழமை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, திமுக தலைவர் நெருக்கடி மற்றும் நிர்பந்தத்தில் இருக்கிறார். முதலில் அவரைக் காப்பாற்ற வேண்டும். அடுத்ததாக திமுகவையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், தென் மாவட்டங்கள் மற்றும் பல மாவட்டங்களில் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தி, அடுத்த கட்ட முடிவை எடுக்கப்போவதாகக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மு.க.அழகிரியுடன் திமுக தொண்டர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த அறிக்கை குறித்து மு.க.அழகிரியிடம் கருத்துக் கேட்டதற்கு அவர் கூறியது:

    எனது ஆதரவாளர்கள் பனங்காட்டு நரிகள். எதற்கும் அஞ்ச மாட்டார்கள். பூச்சாண்டி வேலைக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். பதவி மோகத்தில் இருப்பவர்கள்தான் அங்கு (திமுக) இருக்கிறார்கள் என்று கூறினார்.

    முன்னதாக, திமுக பொதுச் செயலரின் அறிக்கை வெளியானதும் அழகிரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அறிக்கை குறித்து நீங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள், திமுக தலைமையிடம்தான் கேட்க வேண்டும். எனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன்படிதான் நடப்பேன் என்றார்.

    அவரது ஆதரவாளர்களிடம் பேசியபோது, கட்சி நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த அவர்கள், திமுக சோதனையைச் சந்தித்தபோதெல்லாம் பக்கபலமாக இருந்தவர் அழகிரி.

    ஆனால், அவர்மீது தேவையற்ற நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்து வருகிறது. இருப்பினும், நாங்கள் அழகிரியின் பக்கம்தான் துணை நிற்போம். மார்ச் 23இல் ராஜபாளையத்தில் நடக்கும் கூட்டத்தில், எங்களது வலிமையைத் தெரியப்படுத்துவோம் என்றனர்.

    கட்சி அறிவிப்பு குறித்து அழகிரியின் நெருங்கிய ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனிடம் கேட்டதற்கு, அவர் கூறியது:

    மதுரையில் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தியபோது கட்சிக்கு எதிரான தவறாக எந்த கருத்தையும் கூறவில்லை. திமுகவை காப்பாற்ற வேண்டும், திமுக தலைவரை காப்பாற்ற வேண்டும் என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், இப்போது கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை, அவரை வேறுவிதமான முடிவை அறிவிக்க விரும்புகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

    எது எப்படி இருந்தாலும், எங்களை கட்சியில் இருந்து நீக்கினாலும், நீக்காவிட்டாலும் அழகிரியின் வழியில்தான் நடப்போம். ராமாயணத்தில் ராமரைத் தான் வனவாசம் செல்லுமாறு தசரதன் கூறினார். ஆனால், லட்சுமணனும் உடன் சென்றார். அதைப்போலத்தான் நாங்களும். அழகிரி எவ்வழியோ, அதுதான் எங்களுக்கும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai