சுடச்சுட

    

    மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: ஜி.கே.வாசன்

    By dn  |   Published on : 20th March 2014 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vasan_garland

    மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மதவாத அரசியலுக்கு காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வைக்கும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தனின் 82-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் அவர் எழுதிய 6 நூல்களின் வெளியீட்டு விழாவில் புதன்கிழமை கலந்துகொண்டு அவர் பேசியது:

    ஒரு அரசியல் தலைவருக்கு நேரம் கிடைப்பது அரிதான காரியமாக உள்ளது. ஆனால் குமரி அனந்தன் பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

    நமது நாடு இப்போது ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் உள்ளது. அதாவது அடுத்த ஒன்றரை மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் நாம் மகாத்மா காந்தியின் வழியில் மதவாதத்தை எதிர்க்க வேண்டும்.

    காமராஜர் போல கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் அரசின் சாதனையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றார் ஜி.கே.வாசன்.

    முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: தமிழகத்தில் காங்கிரஸ் இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.

    இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் அரசை விட வேறு எந்தக் கட்சியாலும் நல்லது செய்துவிட முடியாது. இந்தியாவின் முயற்சியால்தான் இலங்கையில் தமிழர் ஒருவர் மாகாண முதல்வராகி உள்ளார். தமிழகக் கட்சிகள் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை தங்களது சொந்த ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகின்றனர். இந்தத் தேர்தலில் திராவிடக் கட்சிகளை தோள்களில் சுமக்க வேண்டியதில்லை என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று முதல்வர் கூறுகிறார். உலகப் புகழ்ப்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியை நம்ப வைத்து ஏமாற்றி, கூட்டணி துரோகத்தை ஜெயலலிதாவால் மட்டுமே செய்ய முடியும். எனவே அதிமுக அரசு துரோகத்தை பற்றி பேச தகுதியில்லாத கட்சி.

    காங்கிரஸ் கட்சி விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்கான காலமும் நெருங்கிவிட்டது என்றார் இளங்கோவன்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசு, மூத்த வழக்குரைஞர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    தேர்தலில்  போட்டியிட பயமில்லை

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பயப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று மேலிடம் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இரண்டு தினங்களில் வெளியாகும். கட்சி தலைமை யாரையெல்லாம் தேர்வு செய்கிறதோ அவர்கள் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் வெற்றி பெறும். திராவிடக் கட்சிகள் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்படுவார்கள் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai