சுடச்சுட

    
    bjp_allies

    இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போல கடைசி நிமிஷம் வரை என்ன நடக்குமோ என்று தெரியாத பரபரப்பு பாஜக கூட்டணி விஷயத்திலும் நிலவியது. பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை அறிவிக்கும் அந்த கடைசி நிமிஷம் வரை இந்த கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை அந்த கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களுக்கே இல்லை என்பதுதான் உண்மை. எப்படியோ ஒரு வழியாக கூட்டணி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி அமைந்தது எப்படி என தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் புத்தகம் எழுதினால் அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

    கூட்டணி அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இடையூறுகள் இருந்தாலும், இந்த கூட்டணி தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. திமுக- அதிமுக அணிகளைத் தவிர்த்து வலுவான மூன்றாவது அணி தமிழகத்தில் முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013 செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞரணி மாநாட்டில் நரேந்திர மோடி பங்கேற்றபோது இந்த அணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. அன்று தொடங்கிய போராட்டம் பல மாதங்களுக்குப் பிறகு மார்ச் 20-ஆம் தேதி வெற்றியில் முடிந்துள்ளது. இந்த கூட்டணியை அமைவதில் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் முக்கிய பங்காற்றினார். பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து வியாழக்கிழமை 12 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியிடப்பட்ட நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பகல் 11 மணிக்கே நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் குவிந்தனர். பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக தொண்டர்களும் நூற்றுக்கணக்கில் குவிந்தனர்.

    நிலைமைக்கு ஏற்றவாறு பேனர்கள்:

    செய்தியாளர் சந்திப்பு நடந்த அரங்கில் நான்கு விதமான டிஜிட்டல் பேனர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. விஜயகாந்த், ராமதாஸ், வைகோ, ஈ.ஆர். ஈஸ்வரன், பாரிவேந்தர் படத்துடன் ஒரு பேனரும், ஈ.ஆர். ஈஸ்வரன் இல்லாமல் ஒரு பேனரும், ராமதாஸ் படம் இல்லாமல் ஒரு பேனர் என தயாராக வைக்கப்பட்டிருந்தன. விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், ஈ.ஆர். ஈஸ்வரன், பாரிவேந்தர் ஆகியோர் வந்த பிறகு இவர்கள் நான்கு பேரும் இருக்கும் டிஜிட்டல் பேனர் அரங்கில் வைக்கப்பட்டது. ராஜ்நாத் சிங்குடன் மேடையில் அமரும் தலைவர்களின் பெயர்கள் ஒட்டப்பட்ட நாற்காலிகள் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பகல் 1 மணிக்கு ராஜ்நாத் சிங் வந்த பிறகு விஜயகாந்த், அன்புமணி, வைகோ, ஈஸ்வரன், பாரிவேந்தர் ஆகியோருடன் தனித்தனியாக பேச்சு நடத்தினார். இதற்காக அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நியூ உட்லண்டஸ் ஹோட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தனி அறையில் தங்கியிருந்த விஜயகாந்தை வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இவர்கள் அனைவரும் அங்கேயே மதிய உணவு சாப்பிட்டனர். பகல் 1 மணியிலிருந்து மாலை 3.30 மணி வரை கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தினார்.

    அதன்பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. உடன்பாடு ஏற்பட்டதும் துணிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் வெளியே எடுக்கப்பட்டன. யார் எங்கே அமர்வது என்பதை முடிவு செய்ய ஒரு மணி நேரமானது. மாலை 4 மணிக்கு ராஜ்நாத் சிங், விஜயகாந்த், வைகோ, அன்புமணி, ஈஸ்வரன், பாரிவேந்தர் ஆகியோர் மேடையில் அமர்ந்தனர். ராஜ்நாத் சிங், தொகுதிப் பங்கீட்டை அறிவித்தார். நாளொரு சிக்கல் பொழுதொரு பிரச்னை என்ற நிலையில் தொடர்ந்த பாஜக கூட்டணி வெற்றிகரமாக அமைக்கப்பட்டது குறித்து பாஜக பிரமுகர் ஒருவர் பேசும்போது கலங்கித் தெளிந்திருக்கிறது என்று சொல்லிச் சிரித்தார்.

    விஜயகாந்த்துக்கும் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே மொழி பெயர்ப்பாளராக வைகோ செயல்பட்டார் என்றால் நம்பவா முடிகிறது? நடந்திருக்கிறதே!

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai