சுடச்சுட

    

    பெருந்துறை சாய ஆலை மற்றும் என்.எல்.சி.யில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

    By dn  |   Published on : 21st March 2014 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya

    ஈரோடு மாவட்ட சாய ஆலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    விபத்துகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தடையேதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததைத் தொடர்ந்து நிவாரண நிதி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி ராஜேந்திரன், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் தந்திரத்தின் உச்சகட்டம்.

    பலியானவருக்கு நிவாரணம் வழங்காதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இலை போன்ற தோற்றம் எங்கிருந்தாலும் அதை இரட்டை இலை என்று நினைத்து தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு கொடுத்து வருகிறது.

    இந்தச் சூழ்நிலையில் சில அடிப்படைத் தேவைகள் குறித்து நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாலே, தேர்தல் நடத்தை விதிகளை அதிமுக மீறுகிறது என்று திமுக புகார் அளித்து வரும் சூழ்நிலையில், இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கினால், இதை பெரிதாக்கி தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுக்க அந்தக் கட்சி தயங்காது.

    எனவேதான், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவி ஏதும் வழங்கப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தமிழக அரசின் சார்பில் யாருக்கும் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

    இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவி அளிக்கப்பட்டால், அதற்கு ஒரு களங்கம் கற்பித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்பார், கருணாநிதி.

    இதுபோன்ற புகாருக்கு இடம் அளிக்காமல், நிவாரண உதவியை தேர்தல் முடிந்த பிறகு அறிவித்துக் கொள்ளலாம் எனக் கருதி இரங்கல் செய்தியை மட்டும் வெளியிட்டேன்.

    அரசியல் ஆதாயம் தேடுகிறார்: பல்வேறு விபத்துகளில், நிகழ்வுகளில் உயிரிழப்போருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால், அரசியல் ஆதாயம் தேடும் வகையில், அமைச்சர்கள் சென்று பார்க்கவில்லை, நிவாரண உதவி அளிக்கவில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.

    மத்திய அரசை கண்டிக்கவில்லை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி சம்பவத்தை சுட்டிக்காட்டி, உள்நாட்டு போர் நிகழ்ந்திருப்பது போன்று அறிக்கை வெளியிட்டுள்ளார், கருணாநிதி. இந்தப் பிரச்னையில் மத்திய காங்கிரஸ் அரசை அவர் கண்டித்திருக்க வேண்டும்.

    நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளி மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்தவுடன், மாநில காவல் துறையினர்

    சம்பவ இடத்துக்குச் சென்று நிர்வாகத்திடமும் தொழிலாளர் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையம் தகவல்: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து விபத்துகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தடையேதும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

    அதன்படி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் சாய ஆலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai