சுடச்சுட

    

    முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: கட்டுமானப் பொருள்களுக்கு தடை விதித்த கேரள வனத் துறை

    By dn  |   Published on : 21st March 2014 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mullai_dam

    முல்லைப் பெரியாறு அணையில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிக்கு தேவையான மூலப் பொருள்களை கொண்டு சென்ற தமிழக லாரியை, கேரள வனத் துறையினர் வியாழக்கிழமை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது வழக்கம். அணையின் பராமரிப்புப் பணிகளை, இறுதித் தீர்ப்பு வரும் வரை தொடர்ந்து தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்றும், அதைத் தடுக்கக் கூடாதெனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், அணையில் கடந்த மாதம் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்புப் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், கடந்த 10 நாள்களாக பராமரிப்புப் பணிகளை செய்யவிடாமல், கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும், கேரள வனத் துறையினரும் பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்தனர்.

    வியாழக்கிழமை, அணையின் பராமரிப்புப் பணிக்காக, சிமெண்ட், டைல்ஸ், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை லாரியில் ஏற்றி, அணையின் செயற் பொறியாளர் மாதவன், உதவிச் செயற்பொறியாளர் சௌந்தரம் ஆகியோர், வல்லக்கடவு வனப்பகுதி வழியாக அணைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வல்லக்கடவு வனப் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில், ரேஞ்சர் ராஜேஷ் தலைமையிலான வனத் துறையினர் லாரியைச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

    வனத் துறையினரிடம் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் விசாரித்தபோது, கேரள வனத் துறையினர், கேரள நீர்ப் பாசனத் துறையினர், பெரியார் புலிகள் சரணாலய துணை இயக்குநர் சஞ்சீவன்குமார் ஆகியோர், தங்களிடம் ஓர் உத்தரவு கடிதம் கொடுத்துள்ளதாகவும், அதில் தமிழக பொதுப்பணித் துறையின் சார்பில் அணைக்கு பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் கூறினர்.

    அதேநேரத்தில், தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், தங்களுக்கு கேரள அதிகாரிகள் அளித்துள்ள அனுமதிக் கடிதத்தை அவர்களிடம் காண்பித்தனர். இருப்பினும், அனுமதி மறுக்கப்பட்டு, லாரியை திருப்பி அனுப்பி விட்டனர்.

    இதுதொடர்பாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள், தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், மீண்டும் தமிழக-கேரள அதிகாரிகளுக்கிடையே பிரச்னை துவங்கியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai