சுடச்சுட

    

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஏப்ரல் 3-இல் ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு

    By dn  |   Published on : 21st March 2014 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கின் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஏப்ரல் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    இது குறித்த விவரம்:

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991 - 1992, 1992-1993 ஆகிய நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை.

    இது தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை கடந்த 1997-ஆம் ஆண்டு குற்றவியல் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான வழக்கு எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும் சசிகலாவும் தாக்கல் செய்த மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, கடந்த 2006-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சிறப்பு மேல்முறையீட்டு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை, உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடிக்கும்படி எழும்பூர் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி எழும்பூரில் சென்னை பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு வியாழக்கிழமை (மார்ச் 20) விசாரணைக்கு வந்தது. இதில் வருமான வரித்துறை தரப்பில் வழக்குரைஞர் கே.ராமசாமி, ஜெயலலிதா தரப்பில் வழக்குரைஞர்கள் எஸ்.மணிசங்கர், குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.

    இதில் ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்கள், உச்சநீதிமன்ற உத்தரவில் சில விளக்கங்கள் கோரப்பட்டு இருப்பதால் வழக்கின் விசாரணைக்கு 3 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி, ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai