சுடச்சுட

  

  வழக்கமான தலைவர்களும், வாரிசுகள் 6 பேரும் போட்டி! 30 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

  By dn  |   Published on : 21st March 2014 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  congress_candidate

  தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 30 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் வழக்கமான தலைவர்களும் வாரிசுகளுமே இடம் பெற்றுள்ளனர்.

  மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏழு முறை வெற்றி பெற்ற சிவகங்கை தொகுதியில் இம்முறை அவர் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக மகன் கார்த்தி சிதம்பரம் நிறுத்தப்பட்டுள்ளார்.

  ராமநாதபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு.திருநாவுக்கரசர், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

  முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை தொகுதியிலும் ஆர்.பிரபு கோவை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

  அகில இந்தியச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெயக்குமாருக்கு தென்காசி (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் டி.என்.பாரத் நாச்சியப்பன் போட்டியிடுகிறார்.

  புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி போட்டியிடுவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஒரே ஒரு பெண் வேட்பாளர்: தமிழக மக்களவைத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அவருக்குத் திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு: தற்போது எம்.பி.க்களாக உள்ள காஞ்சிபுரம் (தனி)- பி.விஸ்வநாதன், திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன், திருநெல்வேலி - எஸ்.எஸ்.ராமசுப்பு, தேனி - ஜே.எம்.ஹாரூண், விருதுநகர் - மாணிக் தாகூர் ஆகியோர் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

  இதில் மாணிக் தாகூர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எதிர்த்து இந்தத் தேர்தலிலும் விருதுநகரில் போட்டியிடுகிறார்.

  வாரிசுகளுக்கு வாய்ப்பு: கார்த்தி சிதம்பரத்தைத் தொடர்ந்து வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டதன் வரிசையில் 5 பேர் உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு சேலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. அன்பரசுவின் மகன் அருள் அன்பரசுவும், வேலூர் தொகுதியில் மற்றொரு முன்னாள் எம்.பி., ஜெயமோகனின் மகனும் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவருமான விஜய் இளஞ்செழியனும் போட்டியிடுகின்றனர்.

  அரக்கோணம் தொகுதியில் மாநிலத் துணைத் தலைவர் நாசே ராமச்சந்திரனின் மகனும் இளைஞர் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளருமான நாசே ராஜேஷும் போட்டியிடுகிறார்.

  கடந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமிக்குப் பதிலாக, அவர் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  தொல்.திருமாவளவனை எதிர்த்து...: முன்னாள் எம்.பி. டாக்டர் வள்ளல்பெருமான் சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

  வேலூர், ராமநாதபுரம், நீலகிரி (தனி), கோவை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய 6 தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai