சுடச்சுட

    
    fishermen

    புழல் சிறையிலிருந்து அண்மையில் விடுதலைப் பெற்ற இலங்கை மீனவர்கள் 25 பேரும், நாகையிலிருந்து கடலோரக் காவல் படை மூலம் வியாழக்கிழமை மாலை இலங்கைக்குப் பயணமாகினர். இவர்கள், வெள்ளிக்கிழமை காலை இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவர்.

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே கடந்த பிப். 9-ம் தேதி கடலோரக் காவல் படை போலீஸார் ரோந்துப் பணி மேற்கொண்டபோது, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் வேளாங்கண்ணி கடல் பரப்பில் 5 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, 18 வயதுக்குள்பட்ட ஒருவர் உள்பட 25 இலங்கை மீனவர்களையும் கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். அவர்களின் 5 படகுகளும் கைப்பற்றப்பட்டது.

    25 பேரும் கடந்த பிப். 11-ம் தேதி நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 24 பேர் புழல் சிறையிலும், 18 வயதுக்குள்பட்ட சிறார் சென்னையில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இந்தியா - இலங்கை மீனவர்களிடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தையையொட்டி, நல்லெண்ண அடிப்படையில் இலங்கை மீனவர்கள் 25 பேரும் கடந்த 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து, நாகைக்கு கொண்டு வரப்பட்ட அவர்கள், நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    விடுதலையான இலங்கை மீனவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, 25 மீனவர்களும், அவர்களின் 5 படகுகளுடன் கடலோரக் காவல் படையினரின் ஒருங்கிணைப்பில் வியாழக்கிழமை மாலை நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைச் செல்லும் பயணத்தைத் தொடங்கினர்.

    25 மீனவர்களும் வெள்ளிக்கிழமை காலை சுமார் 11.30 மணிக்கு சர்வதேச கடல் பரப்பில், இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai