சுடச்சுட

    

    அமைச்சர் சம்பத் மீதான புகார்: தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார் கடலூர் மாவட்ட ஆட்சியர்

    By dn  |   Published on : 22nd March 2014 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Sampathminister

    அமைச்சர் சம்பத் மீதான புகார் குறித்து விசாரித்து அது குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அனுப்பியுள்ளார்.

    இந்த அறிக்கையை ஆய்வு செய்து அதன் மீதான முடிவை தேர்தல் ஆணையம் விரைவில் எடுக்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடலூர் மக்களவைத் தொகுதியில், தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மீது புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக, புகைப்பட ஆதாரங்களுடன் திமுக தலைமை அலுவலகத்தின் வழக்குரைஞர் பரந்தாமன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

    இந்த மனு மீது விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமாருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு கடந்த புதன்கிழமையன்று அனுப்பியிருந்தார் மாவட்ட ஆட்சியர்.

    அதில் மேலும் விவரங்களைக் கோரி மீண்டும் அறிக்கை அளிக்கும்படி, மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, அமைச்சர் மீதான புகார் தொடர்பாக மற்றொரு அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அனுப்பி வைத்துள்ளார்.

    இது குறித்து, தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியது:

    கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து தனது இறுதி முடிவை அறிவிக்கும். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க தனியாக பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த செலவினப் பார்வையாளர்களுக்கு உதவிடும் வகையில், 32 கம்பெனி படையினர் (ஒரு கம்பெனி என்பது 100 போலீஸாரைக் கொண்டது) படிப்படியாக தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கம்பெனி பாதுகாப்புப் படையினர் செல்வார்கள். சென்னை மாவட்டத்தில் மட்டும் மூன்று தொகுதிகள் இருப்பதால், இரண்டு கம்பெனி படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

    அனைத்து வாகனங்களிலும் சோதனை: சாலைகளில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமின்றி, ரயில்கள் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுவதாகத் தகவல்கள் வந்தால் அவற்றைக் கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகள் மூலம், இதுவரை ரூ.10 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை உரிய ஆவணங்களுடன் இதுவரை யாரும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று, ரூ.1 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள நகைகளும் ஜவுளிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மாவட்டங்களில் உள்ள கருவூலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai