சுடச்சுட

  

  ஆளில்லா விமானம் மூலம் முக்கிய தலைவர்களின் தேர்தல் பிரசாரங்கள் கண்காணிப்பு

  By dn  |   Published on : 22nd March 2014 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களான நரேந்திர மோடி, அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்களின் தேர்தல் பிரசாரங்களை ஆளில்லாத விமான மூலம் கண்காணிக்க தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.

  தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் கூட்டணி முடிவாகியுள்ள நிலையில், அக்கட்சிகளின் தலைவர்கள் ஓரிரு நாள்களில் முழுவேகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கான வியூகங்களை கட்சி நிர்வாகிகள் வகுத்து வரும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

  குறிப்பாக பாஜக கூட்டணிக் கட்சிகளின் பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், இவர்களுக்கு பல மடங்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

  வழக்கமாக இவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காட்டிலும், இந்த முறை கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும், குறிப்பாக ஆளில்லாத விமானம் மூலம் பிரசார கூட்டங்களைக் கண்காணிக்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

  பிரசாரக் கூட்டத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் இந்த விமானத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிய முடியும் என்பதால் இந்த விமானங்களை பயன்படுத்த உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

  மேலும், இந்தத் தலைவர்களின் பிரசாரத்தின்போது பாதுகாப்பு பணியில் தமிழக போலீஸாருடன், துணை ராணுவத்தினரையும் ஈடுபடுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

  இதற்காக ஏற்கனவே 32 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இப்போது தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

  தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் 200 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு வர உள்ளனர். தேர்தல் பாதுகாப்புக்காக மட்டும் சுமார் 17 ஆயிரம் துணை ராணுவ படையினர் தமிழகத்துக்கு வருகிறார்கள். இவர்கள் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த தொகுதியாக கண்டறியப்படும் இடங்களிலும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai