சுடச்சுட

  
  vijayakanth_canvas1

  இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பதாகக் கூறிவிட்டு குடிக்கும் தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.

  தேசிய ஜனநாயக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனவே, தேமுதிகவின் முரசு சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு திருநெல்வேலி வாகையடிமுனை சந்திப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேனில் நின்றபடி கூட்டத்தினரிடையே அவர் பேசியது:

  நான் விக்கிரமசிங்கபுரத்தில்தான் பள்ளியில் பயின்றேன். அப்போது, திருநெல்வேலியிலிருந்து விக்கிரமசிங்கபுரத்துக்கு பேருந்தில் செல்லும்போது பீடி கம்பெனிகளின் விளம்பரப் பதாகைகள் அதிகம் இருக்கும். வீடுதோறும் பெண்கள் பீடி சுற்றிக் கொண்டிருப்பர். இப்போதும், இங்கு பீடித் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால், திமுக, அதிமுக இரு கட்சிகளும் இந்தத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்கூட பெற்றுத் தரவில்லை. இன்றளவும் பிரச்னைகள் உள்ளன.

  தாமிரவருணி கரையில் அமர்ந்து நிலா சோறு சாப்பிட்ட காலம் போய்விட்டது. இப்போது சாக்கடை தண்ணீர் நதியில் கலந்து மாசுபட்டுவிட்டது. ஆற்றுப் படுகையில் மணல் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, மணல் அள்ளத் தடை விதிக்கின்றனர்.

  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நான்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம், தாழையூத்திலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஏற்படுத்துவதாகக் கூறினர். ஆனால், திட்டம் கிடப்பில்தான் உள்ளது. பேட்டை, தச்சநல்லூர், தாழையூத்து பகுதிகளில் நூற்பாலை உள்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

  சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது மின் தட்டுப்பாட்டை போக்க உடன்குடியில் மின்திட்டம் தொடங்குவதாக அதிமுக அறிவித்தது. இன்றளவும் செங்கல்கூட எடுத்து வைக்கவில்லை. இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பதாகக் கூறிவிட்டு குடிக்கும் தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்கும் நிலை உள்ளது.

  திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே ஆட்சி செய்யும்போதெல்லாம் ஒன்றுக்கு ஒன்று திட்டங்களை முடக்கிவைப்பதாக பரஸ்பரம் புகார் கூறுகின்றன. எனவேதான், தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம்.

  இந்தியா வல்லரசாக வேண்டும், தமிழகத்தில் நல்லரசு அமைய வேண்டும் என்றால் பாஜக கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்க வேண்டும். நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியா வல்லரசு ஆகும். ஊழலற்ற ஆட்சி அமைக்க நரேந்திர மோடி பிரதமர் ஆனால் மட்டுமே முடியும்.

  மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி அமைந்தால், அதன்மூலம் தமிழகத்துக்கு நல்லதை பெற்றுத் தருவோம். குறிப்பாக, மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான தேமுதிக வேட்பாளர் யார் என்பதை பிறகு அறிவிப்பேன். வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.

  இக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளான பாஜக, மதிமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai