சுடச்சுட

    

    உயர்நீதிமன்ற உத்தரவை பரிசீலனை செய்யாத பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் மீது அதிருப்தி

    By dn  |   Published on : 22nd March 2014 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    highcourt

    சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சொத்துகளும் முடக்கப்பட்டன.

    இதை எதிர்த்து, சென்னையில் உள்ள சிறு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில் சென்னையில் நடைபெற்று வந்த அந்த சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

    அதனால், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தை அணுகவும், பிரதான வழக்கின் இறுதி விசாரணைக்குள் லெக்ஸ் நிறுவனத்தின் வழக்கை முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து லெக்ஸ் நிறுவனம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்குமாறு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் அந்த மாதிரி உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை எனக் கூறி அந்த நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தெளிவுபடுத்தக் கோரி லெக்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பிரதான வழக்கின் இறுதி விசாரணைக்கு முன்பு மனுதாரரின் வழக்கை பரிசீலனை செய்யுமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பெங்களூரு நீதிமன்றம் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை என தெரிவித்து மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

    எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதை சார்பு நீதிமன்றங்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பது நீதித்துறையின் மாண்பு. ஆனால், பெங்களூரு நீதிமன்றம் அவ்வாறு செய்யாதது கண்டனத்துக்குரியது. இது என்னிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால், பெங்களூரு நீதிமன்றத்துக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மேலும், மனுதாரருக்கு நிவாரணம் வேண்டுமென்றால் கர்நாடகத்தின் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai