சுடச்சுட

  

  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, கடலூர் மற்றும் விழுப்புரத்தில் முதல்வர் ஜெயலலிதா, ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்கிறார். அவரது வருகையையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்துள்ளனர்.

  கடலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, மஞ்சைநகர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்கிறார். இதற்காக சுமார் 3 லட்சம் பேர் அமரும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் பிரசாரத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. பிரசார மேடையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அண்ணா விளையாட்டரங்கில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் இருந்து காலை ஹெலிகாப்டரில் கடலூர் வந்திறங்கும் ஜெயலலிதா, அங்கிருந்து காரில் சுமார் பிற்பகல் 1 மணியளவில் பிரசார மேடைக்கு செல்கிறார்.

  பின்னர், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசும் அவர், பிறகு ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரம் புறப்பட்டுச் செல்கிறார்.

  ஜெயலலிதாவின் பிரசாரத்தை முன்னிட்டு அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  அசத்தும் அலங்கார வளைவுகள்: முதல்வரை வரவேற்கும் வகையில் ஆட்சியர் அலுவலக சாலையில் கண்கவர் வரவேற்பு வளைவுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மஞ்சை நகர் மைதானத்திலும் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, முதல்வருக்கு அதிமுக மகளிரணியினர் முளைப்பாரி மற்றும் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பளிக்கின்றனர்.

  பாதுகாப்பு வளையத்தில்..: முதல்வரின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹெலிபேட், முதல்வரின் பயணப்பாதை, பொதுக்கூட்டத் திடல் உள்பட 10 இடங்கள் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

  போக்குவரத்து மாற்றம்: நகரின் மையப் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பொதுக்கூட்டம் முடியும் வரை, பாரதி சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, சில்வர் பீச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  விழுப்புரம்: கடலூரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஜெயலலிதா விழுப்புரம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வருகிறார். அவரது வருகையையொட்டி ஜானகிபுரம் புறவழிச் சாலை அருகே பிரசாரப் பொதுக் கூட்டத்துக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.50 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் 25 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேடை நாடாளுமன்றம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

  பொதுக்கூட்ட திடலுக்கு 200 மீட்டர் தூரத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இருந்து பொதுக் கூட்ட மேடைக்கு முதல்வர் வரும் வழியில் தில்லி செங்கோட்டையின் வடிவ மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவுகள், கொடிகள், தோரணங்கள் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

  பொதுக் கூட்ட மேடைக்கு ஜெயலலிதா பிற்பகல் 2.30 மணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

  முதல்வர் வருகையையொட்டி ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் லட்சுமணன், விழுப்புரம் எம்எல்ஏ சி.வி.சண்முகம், நகர் மன்றத் தலைவர் வழக்குரைஞர் ஜி.பாஸ்கரன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர். ஏற்பாடுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai