சுடச்சுட

    
    tutcorin1

    வல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்களைத் தொடர்ந்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய யூனிட் ஒன்றும் வெள்ளிக்கிழமை பழுதானது. இதனால், மின் பற்றாக்குறை 1,500 மெகாவாட்டாக உயர்ந்தது.

    மின் பற்றாக்குறை அதிகரித்ததால், சென்னையைத் தவிர பிற இடங்களில் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மின்வெட்டு இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கோடை காலம் தொடங்கி விட்டதால், மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதனால், மின்தேவையும் 12 ஆயிரத்து 500 மெகாவாட்டுக்கும் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில், புதிய யூனிட்டுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் மொத்த மின் உற்பத்தி 10,971 மெகாவாட்டாக குறைந்தது. அனல் மின் நிலைய யூனிட்டுகளில் சிறிய பழுதுகள் காரணமாகவே மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மின் விநியோகம் ஞாயிற்றுக்கிழமைக்குள் (மார்ச் 23) முழுமையாகச் சீரடையும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வல்லூரில் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகளிலும், வடசென்னை இரண்டாவது ஸ்டேஜில் உள்ள முதல் யூனிட்டிலும் (600 மெகாவாட்) பாய்லர் மற்றும் கண்டக்டரில் ஏற்பட்ட கோளாறுகளால் மின் உற்பத்தி வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

    அதோடு, எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களிலும் தொழில்நுட்பக் கோளாறால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின்வெட்டை விட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டதைவிட கூடுதலாக பல மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்தது.

    இதனிடையே, எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் வியாழக்கிழமை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. வல்லூரில் உள்ள ஒரு யூனிட்டிலும் வெள்ளிக்கிழமை காலை மின் உற்பத்தி தொடங்கியது. இந்த யூனிட்டில் மின் உற்பத்தி 350 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் தூத்துக்குடியில் உள்ள 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது. இதனால், சென்னையைத் தவிர பிற இடங்களில் கூடுதல் மின்வெட்டு தொடர்ந்தது.

    கோவை மண்டலத்தில் வியாழக்கிழமை அதிக அளவுக்கு மின்வெட்டு இல்லையென்றாலும், பல மணிநேரம் மின் விநியோகம் தடைபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதேபோல், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் மின் தேவை அதிகமாக இருக்கும் காலை நேரத்தில் மின்சாரம் அவ்வப்போது விட்டு விட்டு வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மின் உற்பத்தி யூனிட்டுகள் பழுது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

    மின் உற்பத்தி நிலையங்களில் சிறிய அளவிலான பழுது ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள்களில் மின் விநியோகம் சீரடையும். வல்லூரில் பழுதான ஒரு யூனிட்டில் வெள்ளிக்கிழமை மின் உற்பத்தி தொடங்கியது. மற்றொரு யூனிட்டில் சனிக்கிழமை மின் உற்பத்தி தொடங்கப்படும். அதேபோல், வடசென்னை இரண்டாவது ஸ்டேஜில் உள்ள முதல் யூனிட்டில் வெள்ளிக்கிழமை இரவுக்குள் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தூத்துக்குடியில் பழுதான மின் யூனிட் ஞாயிற்றுக்கிழமைக்குள் சீரமைக்கப்படும். எனவே, தமிழகத்தில் மின் விநியோகம் ஞாயிற்றுக்கிழமையன்று சீராகும்.

    மேட்டூரில் உள்ள புதிய யூனிட் மார்ச் 27-ஆம் தேதி மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கும்போது, கோடை வெப்பத்தால் அதிகரித்து வரும் மின் தேவையும் சமாளிக்க முடியும் என அவர்கள் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai