சுடச்சுட

  

  தமிழக - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டவர் கருணாநிதி: மு.க. ஸ்டாலின் பேச்சு

  By dn  |   Published on : 22nd March 2014 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin_canvas1

  தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்க 2 நாட்டு மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு வித்திட்டவர் கருணாநிதிதான் என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

  நாகை, திருவாரூர் மாவட்டங்களில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

  நாகை (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயனுக்கு வாக்கு கோரி, நாகையில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது:

  கடந்த 3 ஆண்டு கால ஆட்சிப் பொறுப்பில் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாத முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறுகிறார். ரூ. 30 கோடி மதிப்பில் நாகையில் மீன்வளப் பல்கலைக்கழகம், எரிவாயு சார்ந்த மின் உற்பத்தி நிலையம், ரூ. 1,600 கோடி மதிப்பில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வேளாண் தொலைநோக்குத் திட்டம் என அதிமுக அரசு அறிவித்த எந்தத் திட்டமும் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.

  தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடுவர் கருணாநிதி

  மட்டும்தான். மீனவர் நலனுக்காக திமுக மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம்.

  மீனவப் பிரதிதிகள் புதுதில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து தங்கள் பிரச்னைகளை நேரில் விளக்கிக் கூற திமுக தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்ததன் விளைவாகத்தான், மத்திய அரசின் நடவடிக்கையாக தற்போது தமிழக - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது என்றார் ஸ்டாலின்.

  வேதாரண்யத்தில்... ராஜாஜி பூங்கா அருகே பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின் பேசியது:

  திமுக ஆட்சிக்காலத்தில்தான் வேதாரண்யம் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. உதாரணமாக, அவுரிக்காடு பாலம் உள்பட 20 பாலங்கள் கட்டப்பட்டன. தலைஞாயிறில் தீயணைப்பு நிலையம், தகட்டூரில் பெரியார் சமத்துவபுரம், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்குப் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன, அரசுக் கல்லூரிக்கு ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு அளித்தது, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ரூ. 2.75 கோடி நிதி ஒதுக்கீடு அளித்தது ஆகியன திமுக ஆட்சிக் காலத்தில்தான் என்றார் ஸ்டாலின்.

  திருவாரூரில்... வாழவாய்க்கால் பகுதியில் அவர் பேசியது:

  திமுக ஆட்சியில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் இவை திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. திருவாரூர் ஆழித்தேரை ஓடவைத்த பெருமை திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு உண்டு.

  ஆனால், அதிமுக அரசு திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோடிக்கணக்கில் செலவு செய்து நிலம் வாங்கியும் இன்னும் பணிகளைத் தொடங்கவில்லை. திருவாரூரில் குடும்ப நீதிமன்றம் தொடங்க 16.7.2013-இல் அனுமதி வழங்கியும் இன்னும் திறக்கவில்லை. வெண்ணாறு, வெட்டாறு, பாமணியாறு, கோரையாறு, ஓடம்போக்கு ஆறுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. திமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை முடக்கியது மட்டுமே இந்த அரசின் சாதனை என்றார் அவர்.

  திருத்துறைப்பூண்டியில்... ஸ்டாலின் பேசியது:

  மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன் என்று ஆட்சிக்கு வந்தவர் அதை செய்யாமல் மத்திய அரசையும், கருணாநிதியையும் குறை கூறி வருகிறார் என்றார்.

  மன்னார்குடியில்...

  மன்னார்குடியில் தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து அவர் பேசியது:

  கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கிவைத்து பழி வாங்கும் ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.

  டெல்டா மாவட்ட மக்களுக்காக செம்மொழி, பாமணி, மன்னை, உழவன், வேளாங்கண்ணி விரைவு ரயில்கள் உள்ளிட்ட பல பயணிகள் ரயில் சேவை பெற்று தந்திருப்பதுடன், மன்னார்குடியில் ரயில் சேவை, மன்னார்குடி, பட்டுக்கோட்டைக்கும், தஞ்சை, பட்டுக்கோட்டைக்கும், தஞ்சை, அரியலூருக்கும் புதிய அகல ரயில் பாதைக்கு அனுமதி வாங்கி தந்துள்ளார் டி.ஆர். பாலு. எனவே, அவரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

   

  நாகை அவுரித் திடலில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயனுக்கு வாக்குக் கோரி

  பிரசாரம் மேற்கொள்கிறார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai