Enable Javscript for better performance
பாரதி கண்ட கனவை நிறைவேற்றுவோம்: ஜெயலலிதா உறுதி- Dinamani

சுடச்சுட

  

  நதி நீர் இணைப்பு குறித்து பாரதி கண்ட கனவை அதிமுக நிறைவேற்றும் என முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். கடந்த 17 ஆண்டுகளாக மத்திய அரசில் இருந்த திமுக நதி நீர் இணைப்பை நிறைவேற்ற ஒன்றுமே செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

  விருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

  வரும் மக்களவைத் தேர்தல் நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் மக்களின் துயரங்களைத் தீர்ப்பதாகவும் அமையவுள்ளது. ஆகவே, மக்களுடைய துன்பங்கள் தீர மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட வேண்டியது அவசியம்.

  மக்களவைத் தேர்தலானது, மக்களாட்சியை நிலைநிறுத்துவதாக மட்டுமின்றி, குடும்ப ஆதிக்க, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும். அதை மக்களாகிய நீங்கள் செயல்படுத்துவீர்களா? (செயல்படுத்துவோம் என மக்கள் முழக்கம்) செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

  தமிழக உரிமைகள், நலன்கள் காக்கப்பட மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைவது அவசியம். விலைவாசி உயர்வு, பணவீக்கம், மாதம்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என காங்கிரஸ் ஆட்சியின் அவலங்கள் ஏராளம். இதுபோன்ற மோசமான ஆட்சியை இதுவரை கண்டதில்லை எனும் அளவுக்கு செயல்பட்ட காங்கிரஸýடன் ஆட்சியில் ஒட்டி உறவாடியது திமுக. தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய 2ஜி ஊழல் திமுகவால் ஏற்பட்டது. ஆகவே, சாமானிய, நடுத்தர மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்திய காங்கிரஸ், திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

  தமிழகத்தில் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்திட பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விலையில்லா அரிசி, சூரிய சக்தி மின்வசதியுடைய பசுமை வீடுகள் திட்டம், இந்துக்கள் புனித யாத்திரை, இஸ்லாமியருக்கு நோன்புகஞ்சி தயாரிப்பதற்கான அரிசி கிலோ ரூ.1-க்கு வழங்கல், உலமாக்களுக்கு ஓய்வூதியம், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல மானியம், ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீடு, மாணவர்க்கு இலவச கணினி என பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

  இஸ்லாமியருக்கு 3.5 சத இட ஒதுக்கீடு கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மின் பற்றாக்குறை நீங்கி கூடுதல் மின்சாரம் கிடைத்து வருகிறது.

  மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட விலைவாசி உயர்விலிருந்து தமிழக மக்களைக் காக்க மலிவு விலை அரசி, பருப்பு, காய்கறிகள் விற்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் அரசு மக்களுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை. அதனுடன் 9 ஆண்டுகள் உறவாடிய திமுகவும் தமிழகத்துக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. ஆனால், கருணாநிதி தமிழக நலனை மறந்துவிட்டு, தன்னலத்தை மட்டும் நிறைவேற்றிக் கொண்டார். இப்போது வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுகிறார்.

  நதிநீர் இணைப்பானது பாரதி கண்ட கனவு. அதை அதிமுக நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது. ஆனால், கடந்த 17 ஆண்டாக மத்திய அரசில் இருந்த திமுக நதி நீர் இணைப்பை நிறைவேற்ற துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. நதி நீர் இணைப்புக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்புத் தெரிவித்தபோது, திமுக கண்டிக்கவில்லை. ஆகவே, நதி நீர் இணைப்பு என கருணாநிதி கூறி வாக்குகளைப் பெறவே மக்களை ஏமாற்றுகிறார்.

  மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முடியாது. தமிழக மீனவர்கள் பிரச்னை, நதிநீர் பிரச்னை, மண்ணெண்ணெய் குறைப்பு பிரச்னை என பல பிரச்னைகளைத் தீóர்ப்பது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால், அந்தப் பிரச்னைகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது. இலங்கை பிரச்னையில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை அரசுக்கே மத்திய அரசு சாதகமாக நடந்து கொள்கிறது. ஆகவே, தமிழக மக்கள் திமுகவுக்கும், காங்கிரஸýக்கும் வாக்களிக்கப் போவதில்லை என உறுதியேற்க வேண்டும்.

  கச்சத்தீவை மீட்க காங்கிரஸ் அரசு அகற்றப்பட வேண்டும். மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் காங்கிரûஸயும் அதற்குத் துணைபோகும் திமுகவையும் தூக்கியெறிய வேண்டும். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தால், அவை வீணாகிவிடும். மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியமைந்தாலே தமிழக நலன், உரிமை காக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் தந்தீர்கள். அதற்கேற்ப ஏற்றம் தந்து வருகிறோம். அதேபோல மத்தியிலும் மாற்றம் தரவேண்டும்.

  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்காமலிருக்க, தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்ந்திட மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்ட அதிமுகவுக்கு வாக்களிப்பது அவசியம். பாரதம் ஒளிர, தமிழகம் மிளிர அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

  எம்.ஜி.ஆர். பாடலை பாடி கூட்டத்தினரைக் கவர்ந்த ஜெயலலிதா

  விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சிவகாசி திருத்தங்கல் அருகே நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு பகல் 1.52 மணிக்கு மதுரையிலிருந்து முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பகல் 2.05 மணிக்கு மேடையேறிய ஜெயலலிதா உடனே பேசத் தொடங்கினார். பகல் 2.45 மணிக்கு நிறைவு செய்தார்.

  பிரசாரக் கூட்டத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அஇமூமுக, தவ்ஹீத் ஜமாஅத், சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களது கட்சிக் கொடியுடன் வந்திருந்தனர்.

  பேச்சின் இடையிடையே மக்களிடம் "இதை நிறைவேற்றுவீர்களா?' என அவர் கேட்டது கூட்டத்தினரை உற்சாகம் கொள்ளச் செய்தது. பேச்சின் நிறைவில் அவர் "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா, ஆறிலும் சாவு...நூறிலும் சாவு...தாயகம் காப்பது கடமையடா..." என எம்.ஜி.ஆர். பாடலை நினைவூட்டி பேச்சை முடித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai