Enable Javscript for better performance
விருப்பு, வெறுப்பின்றி பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    விருப்பு, வெறுப்பின்றி பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

    By dn  |   Published on : 22nd March 2014 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijayakanth

    கூட்டணி வெற்றிக்காக விருப்பு, வெறுப்பு இன்றி இரவு பகல் பாராமல் அனைவரும் 40 தொகுதிகளிலும் பாடுபட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

    மேலும், தமிழகத்தில் பாஜகதான் முதன்மையான கூட்டணி, அந்தக் கூட்டணியே மக்கள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி என்றும் அவர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்தியாவை ஒரு வல்லரசு நாடாகவும், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடாகவும், தனிநபர் வருமானத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு.

    இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஊழல் என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். தமிழகத்தில் ஊழலுக்குப் பெயர்போன அதிமுக, திமுக, காங்கிரஸýக்கு மாற்றாக புதியதொரு அணியை உருவாக்கிடும் முயற்சியின் விளைவுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகும்.

    முதல் கூட்டணி: இந்தக் கூட்டணியில் இந்திய அளவில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்தாலும், தமிழகத்தில் தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல இயக்கங்கள் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன.

    பல இயக்கங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இது மக்கள் கூட்டணி, தமிழகத்தின் முதல் கூட்டணி. வெற்றிக் கூட்டணி.

    நாட்டில் ஏழை மக்களின் வறுமைக்கும், அவர்களின் வாழ்வாதார பிரச்னைக்கும் லஞ்சமும், ஊழலும்தான் பெரிதும் காரணமாக உள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை முறையாக தீட்டி, லஞ்சம், ஊழல் இல்லாத வகையில் நிறைவேற்றி இருந்தால், இந்திய நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையோ முற்றிலும் நேர்மாறாக உளளது.

    பாஜக கூட்டணி ஆட்சி அமைந்திட வேண்டும்; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் இந்திய அரசு அமைய வேண்டும்.

    இது இந்தியாவைக் கட்டாயம் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவேதான், பாஜகவுடன் தேமுதிக உடன்பாடு கொண்டு, அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

    தேமுதிகவினர் அனைவரும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும். பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும் என்ற குறிக்கோளோடு சுய விருப்பு, வெறுப்பு இன்றி இரவு பகல் பாராமல் அனைவரும் 40 தொகுதிகளிலும் பாடுபட வேண்டும்.

    மேலும், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தோழமைக் கட்சியினர் அனைவரும் எந்த நோக்கத்துக்காக ஒன்றிணைந்துள்ளோமோ, அதை நிறைவேற்றும் வகையில் வெற்றியைப் மட்டுமே நமது குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும்.

    இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை நல்லரசாக்கவும் அனைவரும் ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம். மகத்தான வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai