சுடச்சுட

    

    "ஸ்மால் பஸ்'களில் இலை ஓவியம்: தீர்ப்பு மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு

    By dn  |   Published on : 22nd March 2014 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    small_bus

    அரசு "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள ஓவியத்தை மறைக்கக் கோரிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, அதிமுக சார்பில் வழக்குரைஞர் மனோஜ் பாண்டியன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு மார்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, அப்போது, யூகத்தின் அடிப்படையிலா? அல்லது இரட்டை இலை என்ற உறுதியான முடிவின் அடிப்படையிலா? என்பதை தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (மார்ச் 21) விசாரணைக்கு வந்தது.

    அப்போது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பதில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவின் விவரம்:

    அரசு "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியம் அதிமுகவின் கட்சி சின்னம் போல் இருப்பதால் அதை மறைக்க உத்தரவிட வேண்டும் என்று ஏற்காடு இடைத்தேர்தலின் போது கேள்வி எழுந்தது.

    இதுவரை ஏற்காடு பகுதிக்கு "ஸ்மால் பஸ்'கள் செல்லவில்லை. அதனால், அப்போது அதை மறைக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்கவில்லை.

    தற்போது மாநிலம் முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த ஓவியத்தை மறைக்க வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் பரிசீலனை செய்யப்பட்டு, "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியங்கள் அதிமுகவின் சின்னத்தை ஒத்திருப்பதால் அதை மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த 10-ஆம் தேதி உத்தரவிட்டது.

    "ஸ்மால் பஸ்'களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியம், அதிமுகவின் சின்னத்தைப் போல் இருப்பதால் இரண்டுக்கும் இடையே குழப்பம் ஏற்படும். மேலும், வாக்காளர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

    மேலும், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் இலை ஓவியத்தை மறைப்பதுதான் சரியாக இருக்கும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai