சுடச்சுட

  

  எனக்கு தோல்வி பயமல்ல; மகனுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறேன்

  By dn  |   Published on : 23rd March 2014 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chidambaram_canvas

  தனக்கு தோல்வி பயமில்லை என்றும், தேர்தல் களத்தில் தனது மகனுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

  சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தி. புஷ்பராஜ் தலைமையில், சனிக்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் சிதம்பரம் பேசியது:

  நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோது, அந்த ஆட்சியின் அருமையை உணர்ந்த மக்கள் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய அழைத்ததுதான் கடந்த கால வரலாறு. எனவே, 5 முனைப் போட்டியால் அஞ்ச வேண்டியதில்லை. யாருடைய இடையூறும் தற்போது கிடையாது.

  தோல்வி பயத்தால் நான் போட்டியிடவில்லை எனக் கூறுவது தவறு. எனது மகனுக்கு தேர்தல் களத்தில் வாய்ப்புக் கொடுத்திருப்பதன் மூலம் இதை தெரிந்து கொள்ளலாம். நமது பாதை தெளிவாக இருக்கிறது. அதை வரும் தேர்தல் வெற்றி மூலம் நிரூபிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார் சிதம்பரம்.

  வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசியது: எந்த ஒரு வேட்பாளரின் பெயரையும் உச்சரிக்காத முதல்வர் ஜெயலலிதா காரைக்குடியில், எனது பெயரை 2 முறை குறிப்பிட்டுள்ளார்.

  மக்களின் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் கடையை திறப்பதைவிட, வங்கிகளைத் திறப்பது மேலானது. மாதம் முழுவதும் சம்பாதித்ததை வங்கிக்கு கொண்டு செல்பவர் வாழ்க்கை உயரும். ஆனால், டாஸ்மாக் கடைக்குச் செல்பவர் என்ன ஆவார் என்பது இங்கு வந்துள்ள பெண்களுக்கு நன்றாகத் தெரியும்.

  தேர்தலில் தனியாகப் போட்டியிடுவதுபோல அதிமுகவும், பாஜகவும் பாசாங்கு செய்து வருகின்றன. எனவே, சிறுபான்மையின மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

  கடந்த மூன்றாண்டு கால அதிமுக ஆட்சியில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. எனவே, வரும் தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்ட காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும் என்றார்.

  மாநாட்டுக்கு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.ஆர். ராமசாமி, என். சுந்தரம், வி. ராஜசேகரன், ராம. அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  திருமயம் முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புராம் வரவேற்றார். சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி. சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai