Enable Javscript for better performance
குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்? கோஷ்டி பூசலால் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்? கோஷ்டி பூசலால் தாமதம்

    By dn  |   Published on : 23rd March 2014 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்காதது, அக் கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, வேட்பாளர் வாய்ப்பைப் பெறுவதில் 4 பேர் தீவிரமாக உள்ளனர்.

    குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே கோஷ்டிபூசல் நீடித்து வரும் நிலையில், யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதில் கட்சி மேலிடம் குழப்பத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள 30 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சித் தலைமை கடந்த 20-ஆம் தேதி அறிவித்தது. கன்னியாகுமரி உள்பட 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    குமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 40 பேர் மனு அளித்து உள்ளனர். இவர்களில் எச். வசந்தகுமார், ராபர்ட் புரூஸ், விஜயதரணி எம்.எல்.ஏ., முன்னாள் நகராட்சித் தலைவர் அசோகன் சாலமன், முன்னாள் எம்.எல்.ஏ. டி. குமாரதாஸ், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.டி. உதயம், கணியாங்குளம் ஊராட்சித் தலைவர் செல்வகுமார் ஆகியோர் முக்கியமானவர்கள்.

    இம் மாவட்டத்தைப் பொருத்தவரை அசோகன் சாலமன் தலைமையில் ஒரு கோஷ்டியும், ராபர்ட் புரூஸ் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது.

    போட்டியிட மனு அளித்தவர்களில் ராபர்ட் புரூஸ், தங்கபாலு கோஷ்டியைச் சேர்ந்தவர் என்றாலும், மாவட்டத்துக்கு வந்த அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும் வரவேற்பு அளித்து வந்துள்ளார். அசோகன் சாலமன் இளங்கோவனுக்கு நெருக்கமானவர். இவர்கள் இருவரும் தங்களுக்கு சீட் கிடைக்க தங்கபாலுவையும், இளங்கோவனையும் நம்பி உள்ளனர். மேலும், வசந்தகுமார் மற்றும் விஜயதரணி ஆகியோர் தில்லியில் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்பதால் அவர்களும் சீட் பெற முயன்று வருகின்றனர். இவர்கள் நால்வரில் ஒருவருக்குத்தான் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றபோதுகூட, இம் மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியது.

    இந்நிலையில், தற்போதைய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டபோதும், கன்னியாகுமரி தொகுதி அக்கட்சிக்கு நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. ஆனால், தாங்கள் வலுவாக உள்ள தொகுதிக்கும் வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் மேலிடம் தாமதம் செய்வது அக்கட்சித் தொண்டர்களிடையே நம்பிக்கையை குலையச் செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai